தேடுதல்

ஹெயிட்டி நாட்டின் அரசுத்தலைவர் Jovenel Moïse மற்றும் துணைவியாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2018 ஹெயிட்டி நாட்டின் அரசுத்தலைவர் Jovenel Moïse மற்றும் துணைவியாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2018  (AFP or licensors)

ஹெயிட்டி அரசுத்தலைவர் கொலை – திருத்தந்தை அனுதாபம்

நெருக்கடிகளையும், மோதல்களையும் தீர்ப்பதற்கு, வன்முறை ஒருநாளும் தீர்வாக அமையாது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹெயிட்டி நாட்டின் அரசுத்தலைவர் Jovenel Moïse அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலையைக் கேள்விப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹெயிட்டி நாட்டு மக்களுக்கும், இந்த கொலைமுயற்சியில் தாக்கப்பட்ட அவரது மனைவிக்கும் தன் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறார் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஒரு தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், தன் அறுவைச் சிகிச்சையை நிறைவு செய்து ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இந்த கொலைமுயற்சியில் தாக்கப்பட்ட அரசுத்தலைவரின் மனைவிக்காக திருத்தந்தை செபித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நெருக்கடிகளையும், மோதல்களையும் தீர்ப்பதற்கு, வன்முறை ஒருநாளும் தீர்வாக அமையாது என்று திருத்தந்தை கூறியதாக இத்தந்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், ஹெயிட்டி நாட்டு மக்கள், அமைதியிலும், ஒப்புரவிலும் வாழ திருத்தந்தை தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

பிரெஞ்சு மொழியில் அனுப்பப்பட்டுள்ள இந்தத் தந்திச் செய்தியை, கர்தினால் பரோலின் அவர்கள், ஹெயிட்டி நாட்டின் திருப்பீடத் தூதருக்கு அனுப்பியுள்ளார்.

1968ம் ஆண்டு பிறந்த Jovenel Moïse அவர்கள், 2017ம் ஆண்டு, ஹெயிட்டியின் அரசுத்தலைவராக பொறுப்பேற்றார். ஜூலை 6ம் தேதி நள்ளிரவுக்கும் ஜூலை 7ம் தேதி விடியற்காலைப் பொழுதுக்கும் இடைப்பட்ட நேரத்தில், இவர், தனது இல்லத்தில் கொலையுண்டார். அவரது மனைவி Martine Marie Étienne Moïse அவர்கள், படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை முயற்சியை மேற்கொண்டதாகக் கருதப்படும் குழுவின் நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.

08 July 2021, 13:28