தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

டெல்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் தீபக் வலேரியன்

முஸஃபர்பூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த, டெல்லி புதிய துணை ஆயர் தீபக் வலேரியன் அவர்கள், 2015ம் ஆண்டு முதல், இராஞ்சி, புனித ஆல்பர்ட் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றியவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின், டெல்லி உயர்மறைமாவட்டத்திற்கு, புதிய துணை ஆயராக, அருள்பணி தீபக் வலேரியன் தவ்ரோ (Deepak Valerian Tauro) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 16, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார்.

1967ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூரில் பிறந்த, டெல்லி துணை ஆயர் தீபக் வலேரியன் அவர்கள், மெய்யியல் படிப்பை, பரக்பூரிலும் (1986-1990) இறையியல் படிப்பை இராஞ்சியிலும் (1992-1996), ஆன்மீகம் மற்றும், உளவியலில் முதுகலை பட்டப்படிப்பை பெங்களூருவிலும் முடித்து, 1996ம் ஆண்டில் முஸஃபர்பூர் மறைமாவட்டத்திற்கென, அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

பங்குத்தந்தை, மறைமாவட்ட இளையோர் அமைப்பு இயக்குனர், அருள்பணித்துவப் பயிற்சி கல்லூரி இயக்குனர், முஸஃபர்பூர் ஆயருக்குச் செயலர் போன்ற பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர், பீகார், ஜார்க்கண்ட், மற்றும், அந்தமான் ஆயர் பேரவையின் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

முஸஃபர்பூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த, டெல்லி புதிய துணை ஆயர் தீபக் வலேரியன் அவர்கள், 2015ம் ஆண்டு முதல், இராஞ்சி, புனித ஆல்பர்ட் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றியவர்.

டெல்லி உயர்மறைமாவட்டம்

1910ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, சிம்லா உயர்மறைமாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தற்போதைய டெல்லி உயர்மறைமாவட்டம், 1937ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி டெல்லி, மற்றும், சிம்லா உயர்மறைமாவட்டமாகப் பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 1959ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, டெல்லி உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வுயர்மறைமாவட்டத்திற்கு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இருமுறை (பிப்.1986, நவ.1999) திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

16 July 2021, 15:23