தேடுதல்

Vatican News
வத்திக்கானில் தென் சூடான் தலைவர்கள் கூட்டம் வத்திக்கானில் தென் சூடான் தலைவர்கள் கூட்டம்   (Vatican Media)

தென் சூடானுக்கு, திருத்தந்தை, ஆங்லிக்கன் தலைவர்கள் மடல்

தென் சூடான் அரசியல் தலைவர்கள், நாட்டு மக்களின் நலனுக்காக, மிக அதிகமாகப் பணியாற்றவேண்டும் - திருத்தந்தை, ஆங்லிக்கன் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் சூடான் சுதந்திரம் அடைந்ததன் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இங்கிலாந்து மற்றும், ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களாகிய பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், பேராயர் Jim Wallace அவர்களும் இணைந்து, தென் சூடான் அரசியல் தலைவர்களுக்கு, தங்களின் ஆசீரும், நல்வாழ்த்துக்களும் கலந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்த ஆண்டு நிறைவு, அந்நாட்டினரின் கடந்தகாலத் துன்பங்களையும், வருங்காலத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் நினைவுக்குக் கொணர்கின்றது என்றுரைக்கும் அம்மடல், தென் சூடான் மக்கள் அனைவரும், சுதந்திரத்தின் கனிகளை முழுமையாய் அனுபவிக்க, மேலும் கூடுதலான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என, அரசியல் தலைவர்களை வலியுறுத்தியுள்ளது.   

இதற்குமுன்னர், கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கென நாங்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், உங்கள் நாட்டினர் மத்தியில் நம்பிக்கையும், பணியில் மனத்தாராளமும் நிலவுமாறு செபிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம், அன்றிலிருந்து நாட்டின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகின்றது என்று, அத்தலைவர்கள் தங்கள் மடலில் குறிப்பிட்டுள்ளனர்,

தென் சூடான் நாடு, அளப்பரிய சக்திகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது, அதேவேளை, அந்நாட்டு மக்கள் அச்சத்திலும், நிச்சயமற்றதன்மையிலும் வாழ்ந்துவருவது கவலையளிக்கின்றது எனவும், அந்நாட்டின் தேசிய பண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள நீதி, சுதந்திரம் மற்றும், வளமை ஆகியவற்றை உண்மையிலேயே பெறுகிறோம் என்பதில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் எனவும், அம்மடலில் கூறப்பட்டுள்ளது.

தென் சூடான் நாடு, இறையாட்சியைப் பிரதிபலிக்கும் முறையில் அதனை வடிவமைக்க கூடுதலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும், அதற்கு அரசியல் தலைவர்களின் தியாகம் அவசியம் என்று கூறியுள்ள அம்மடல், கிறிஸ்துவின் தலைமைத்துவத்தைப் பின்பற்றி, நாட்டைக் கட்டியெழுப்புமாறும், இந்த முயற்சியில் நாங்கள் உடனிருக்கிறோம் என்று, திருத்தந்தையும், பிரித்தானிய கிறிஸ்தவத் தலைவர்களும் கூறியுள்ளனர்,

2019ம் ஆண்டில், வத்திக்கானில், தென் சூடானின் அரசியல், மற்றும், மதத் தலைவர்கள் கலந்துகொண்ட வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த உறுதிமொழிகளைச் செயல்படுத்துவது, நாங்கள், தென்சூடானுக்கு பயணம் மேற்கொள்ள வழியமைக்கும் என்று, திருத்தந்தையும், பிரித்தானிய கிறிஸ்தவத் தலைவர்களும் கூறியுள்ளனர்.

09 July 2021, 14:53