தேடுதல்

Vatican News
திருப்பலி நூல் திருப்பலி நூல்  

1962ம் ஆண்டின் உரோமை திருப்பலி நூலைப் பயன்படுத்துவது குறித்த...

உலகின் அனைத்து ஆயர்களோடு மேற்கொண்ட ஆலோசனைகளுக்குப்பின், 1962ம் ஆண்டின் உரோமைத் திருப்பலி நூலைப் பயன்படுத்துவது குறித்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலத்தீன் வழிபாட்டுமுறை திருவழிபாட்டு சடங்கில், அதாவது, உரோமை திருப்பலி நூலில், 1970ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சீர்திருத்தத்திற்குமுன் உள்ள சடங்குமுறைகள், திருவழிபாடுகளில் பயன்படுத்தப்படுவது பற்றிய புதிய விதிமுறைகளை, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் "Motu Proprio" என்ற அறிக்கை வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 16, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

“TRADITIONIS CUSTODES” அதாவது “பாரம்பரிய பழக்கவழக்கங்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, இந்த "Motu Proprio" அறிக்கையோடு, அது வெளியிடப்படுவதற்குரிய காரணங்களை விளக்கும் மடல் ஒன்றையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

உலகின் அனைத்து ஆயர்களோடு மேற்கொண்ட ஆலோசனைகளுக்குப்பின், 1962ம் ஆண்டின் உரோமைத் திருப்பலி நூலைப் பயன்படுத்துவது குறித்த இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில், தல ஆயர்களுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

தன் மறைமாவட்டத்தின் திருவழிபாட்டு வாழ்வை வழிநடத்துவதில் மேலான அதிகாரம் கொண்டவர், தல ஆயரே என்பதால், தன் மறைமாவட்டத்தில், 1962ம் ஆண்டின் திருப்பலி நூல் பயன்படுத்தப்படுவதை, அவர் மட்டுமே அனுமதிக்கமுடியும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இதில், ஆயர்கள், திருப்பீடத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குமுன் உள்ள உரோமைத் திருப்பலி நூலின்படி திருவழிபாடுகளை ஏற்கனவே நிறைவேற்றும் குழுக்கள், அப்பொதுச்சங்கம், மற்றும், திருத்தந்தையரின் அதிகாரப்பூர்வ போதனைகளால் கூறப்பட்டுள்ள திருவழிபாட்டுச் சீர்திருத்தங்களின் உண்மையான மதிப்பைப் புறக்கணிக்காமல் இருப்பதை, ஆயர்கள் கண்காணிக்கவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

1962ம் ஆண்டின் திருவழிபாட்டு நூலின்படி நிறைவேற்றப்படும் திருப்பலிகள், பங்குத்தளங்களில் இடம்பெறக்கூடாது என்றும், அவை நிறைவேற்றப்படும் இடங்கள் மற்றும், நாள்களை ஆயர்கள் உருவாக்கவேண்டும் என்றும், அவற்றில் உள்ளூர் மொழிகளில் வாசிக்கப்படும் வாசகங்கள், அப்பகுதியின் ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், திருத்தந்தையின் அறிக்கை கூறுகிறது.

அத்திருவழிபாடுகளை நிறைவேற்றுபவரும் ஆயரால் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குமுன் உள்ள சடங்கு முறையில் இடம்பெறும் திருவழிபாடுகள், நம்பிக்கையாளரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறதா என்பதை ஆயர் மதிப்பீடு செய்யவேண்டும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

அத்திருவழிபாடுகளை நிறைவேற்றுபவர், சரியாக அவற்றை நிறைவேற்றுபவராகவும், நம்பிக்கையாளரின் மேய்ப்புப்பணியிலும், ஆன்மீகத்திலும் அக்கறை உள்ளவராகவும் இருக்கவேண்டும், புதிய குழுக்கள் உருவாவதை ஆயர்கள் அனுமதிக்காதிருக்கவேண்டும் என்றும், இன்றைய Motu proprio அறிக்கை வெளியிடப்பட்டதற்குப்பின் திருப்பொழிவு பெறும் அருள்பணியாளர்கள், 1962ம் ஆண்டின் திருப்பலி நூலைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள், தல ஆயரிடம் முறையான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என்றும், இதற்கு அனுமதியளிப்பதற்குமுன், ஆயர்கள், திருப்பீடத்தைக் கலந்தாலோசித்திருக்கவேண்டும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தையின் Ecclesia Dei அவையினால் உருவாக்கப்பட்ட அர்ப்பணிக்கப்பட்ட துறவு சபைகள் மற்றும், திருத்தூது வாழ்வுக் கழகங்கள், தற்போது துறவியர் பேராயத்தின்கீழ் வருகின்றன. இவற்றின் திருவழிபாட்டு முறைகளை, திருவழிபாட்டு பேராயம் கண்காணிக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.  

16 July 2021, 15:30