தேடுதல்

ஐவரி கோஸ்ட் நாட்டில் சிறு விவசாயி ஐவரி கோஸ்ட் நாட்டில் சிறு விவசாயி 

உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

நம் பூமிக்கோளத்தின் இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக உறுஞ்ச நாம் வழி அமைப்பதால், நமக்கு வெளியில் பாலைநிலங்களையும், நம் உள்ளங்களில் பாலைநிலங்களையும் உருவாக்கிவருகிறோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், நாம் சந்தித்துவரும் மிகப்பெரும் சவால்களில், பட்டினி, உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவையும் அடங்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

இத்தாலிய அரசின் அழைப்பை ஏற்று, ஜூலை 26, இத்திங்கள் முதல், 28, இப்புதன் முடிய, உரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டின் தயாரிப்பு கூட்டத்திற்கு, திருத்தந்தை, இஸ்பானிய மொழியில் எழுதியுள்ள இச்செய்தியை, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையைக் குலைக்கும்வண்ணம், நம்மிடையே உருவாகியுள்ள அநீதிகளை, இந்த பெருந்தொற்று மேலும் வெளிப்படையாக புரியவைத்துள்ளது என்று, திருத்தந்தை, தன் செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த பூமிக்கோளத்தின் உற்பத்தியைப் பெருக்கும்வண்ணம், தொழில்நுட்பங்களை வளர்த்து, அவை, நம் பூமிக்கோளத்தின் இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக உறுஞ்ச நாம் வழி அமைப்பதால், நமக்கு வெளியில் பாலைநிலங்களையும், நம் உள்ளங்களில் பாலைநிலங்களையும் உருவாக்கிவருகிறோம் என்ற கவலையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் வெளியிட்டுள்ளார்.

மனித குடும்பத்திற்குத் தேவையான உணவை நாம் உற்பத்தி செய்யும் அதே வேளையில், பல கோடி மக்கள் ஒவ்வொரு நாள் உணவுக்கும் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பெரும் அநீதியை, வேரோடு களைவது, நம் அனைவரின் கடமை என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலத்தில், நாம் மீண்டும், கிராமப்புறங்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, உலகளாவிய உணவு உற்பத்தியை பெருக்கி, அது அனைவரையும் சென்றடையும் வழிகளையும் உறுதி செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

பாரம்பரிய, பழங்குடியின உணவு முறைகளுக்கு உரிய மதிப்பை வழங்கி, அவற்றை மீண்டும் உயிர்ப்பித்து, மனித குடும்பத்தையும், பூமிக்கோளத்தையும் காப்பது நம் அனைவருக்கும் முன் இருக்கும் மிகப்பெரும் சவால் என்பதையும், திருத்தந்தை இச்செய்தியில் நினைவுறுத்தியுள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நியூ யார்க் நகரில் நடைபெறவிருக்கும் உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டிற்கு முன்னேற்பாடாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியை, ஜூலை 26, இத்திங்களன்று நடைபெற்ற துவக்க அமர்வில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் வாசித்தளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2021, 14:15