தேடுதல்

திருத்தந்தை சிகிச்சை பெற்றுவரும் ஜெமெல்லி மருத்துவமனை திருத்தந்தை சிகிச்சை பெற்றுவரும் ஜெமெல்லி மருத்துவமனை  (AFP or licensors)

அறுவைச் சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையில் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பெருங்குடல் நாளச்சுவர் பிதுக்கம் அகற்றும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பெருங்குடல் நாளச்சுவரில் உருவான நலப்பிரச்சனையைத் தீர்க்க, ஜூலை 4, ஞாயிற்றுக்கிழமையன்று மாலை, அறுவைச் சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் நலமுடன் உள்ளார் என தெரிவித்த திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை, மருத்துவர் Sergio Alfieri அவர்களின் தலைமையின் கீழ், மேலும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு, இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டதாகவும், திருத்தந்தை தற்போது நலமுடன் மருத்துவமனையில் ஒய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்தது.

வயிற்றின் இடது பக்கம் 3 மணி நேரம் இடம்பெற்ற இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, 7 நாட்கள் திருத்தந்தை ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4, இஞ்ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழக்கம்போல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அறுவைச் சிகிச்சியை முன்னிட்டு, ஞாயிறு பிற்பகலில், உரோம் நகரின் கத்தோலிக்க மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துமனையான ஜெமெல்லி நோக்கி பயணமானார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதையும், புதன் மறைக்கல்வி உரைகளையும் ஒதுக்கிவைத்து கோடைக்கால ஓய்வை சாந்தா மார்த்தா இல்லத்திலேயே மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கியைந்த வகையில், இம்மாதத்தில் அறுவை சிகிச்சைக்குத் திட்டமிட்டிருந்தார்.

ஜூலை 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில், மயக்க மருந்து வல்லுநர்கள் உட்பட, 10 மருத்துவர்கள் அடங்கிய குழு ஈடுபட்டது.

05 July 2021, 14:47