தேடுதல்

விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு 

நம்பிக்கை, ஒருமைப்பாட்டின் அடையாளங்களாகச் செயல்பட அழைப்பு

SIGNIS எனப்படும், உலகளாவிய கத்தோலிக்க ஊடகவியலாளர் அமைப்பின் பிரேசில் கிளை, பிரேசில் ஆயர் பேரவையின் உதவியோடு, 12வது தேசிய கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கூட்டத்தை நடத்திவருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

பிரச்சனைகளால் பிளவுபட்டுள்ள ஒரு நாட்டில், ஒப்புரவு, மற்றும், ஒற்றுமை ஆகியவற்றின் கருவிகளாக, கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் செயல்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு, துயர்நிறைந்த காலத்தை எதிர்கொண்டுவரும் பிரேசில் நாட்டில், நம்பிக்கை மற்றும், ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்கும் பாலங்கள் கட்டியெழுப்பப்பட, கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் உதவுமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

நம்பிக்கை, ஒருமைப்பாட்டின் அடையாளங்கள்

பிரேசில் ஆயர் பேரவையின் (CNBB) ஆதரவோடு நடைபெற்றுவரும், 12வது தேசிய கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் திருஅவை, ஒற்றுமை, மற்றும், ஒப்புரவின் கருவிகளாகச் செயல்படவேண்டியது, எக்காலத்தையும்விட, இக்காலத்தில், அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டில் இடம்பெற்றுவரும் அரசியல், மற்றும் சமுதாயப் பதட்டநிலைகள், நாட்டை பிளவுபடுத்தியிருக்கும் இவ்வேளையில், உயிர்த்த ஆண்டவர், தன் சீடர்களுடன், உலக முடிவுவரை உடன்வருகிறார் (மத்.28,20) என்பதில் நம்பிக்கை வைத்து, ஒப்புரவின் பாலங்களைக் கட்டியெழுப்புமாறு, அந்நாட்டுத் திருஅவைக்கு அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரேசில் திருஅவையின் மறைப்பணியில், கத்தோலிக்க ஊடகவியலாளர்களின் பங்கைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் உண்மைக்குச் சான்றுகளாய்ச் செயல்படுமாறு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பிரேசில் கத்தோலிக்க ஊடகவியலாளர்களுக்கென்று, திருத்தந்தை எழுதியுள்ள இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பிரேசில் ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ளார்.

இந்த 12வது தேசிய கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கூட்டம் தொடங்கிய ஜூலை 26, இத்திங்களன்று, பிரேசில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Walmor Oliveira de Azevedo அவர்கள், அச்செய்தியை வாசித்தார்.

SIGNIS எனப்படும், உலகளாவிய கத்தோலிக்க ஊடகவியலாளர் அமைப்பின் பிரேசில் கிளை, பிரேசில் ஆயர் பேரவையின் உதவியோடு, 12வது தேசிய கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கூட்டத்தை நடத்திவருகிறது. இதில் 5,600 பேர் பங்குபெற்று வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 14:59