தேடுதல்

மூவேளை செபவுரையின்போது - 250721 மூவேளை செபவுரையின்போது - 250721 

கலந்துரையாடலின்றி, வரலாறோ, வாழ்வோ முன்னோக்கிச் செல்லாது

தாத்தாக்கள் பாட்டிகளுக்கு இளைய சமுதாயமும், இளைய சமுதாயத்திற்கு தாத்தாக்கள் பாட்டிகளும் அதிகம் அதிகமாக தேவை என்பதால், அவர்கள், தங்களிடையே உரையாடுவதும், சந்திப்பதும் அவசியத் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோரின் முதல் உலக நாள் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டதைக் குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது தலைமுறைகளுக்கிடையே நிலவும் ஒப்பந்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு சமுதாயமும், தாத்தாக்கள் பாட்டிகளையும், தனிமையில் இருக்கும் முதியோரையும் சந்தித்து, 'நான் என்றும் உங்களோடிருப்பேன்' என்றுரைத்த இயேசுவின் வாக்குறுதியை, தன் சார்பாக, அனைவருக்கும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பயன்படுத்தி தூக்கியெறியும் ஒரு கலாச்சாரத்தில், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோரின் மதிப்பை இந்த சமுதாயத்திற்கு  வெளிப்படுத்தும் அழைப்புக்கு பதிலுரைப்பவர்களாக முதியோர் செயல்பட உதவுமாறு, இறைவனை நோக்கி செபிக்கிறேன் எனவும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தாக்கள் பாட்டிகளுக்கு இளைய சமுதாயமும், இளைய சமுதாயத்திற்கு தாத்தாக்கள் பாட்டிகளும் அதிகம் அதிகமாக தேவை என்பதால், அவர்கள் தங்களிடையே உரையாடுவதும், சந்திப்பதும் அவசியத் தேவை, ஏனெனில், ஒரு மரம் வளர்வதற்கு தேவையானவை, அதற்கு கீழ் புதைக்கப்பட்டதிலிருந்தே பெறப்படுகிறது என்பதை எடுத்துரைத்து, மரத்தையும், அதற்கு ஊட்டம் தரும் எருவையும், இளையோர், மற்றும் முதியோராக உருவகப்படுத்திப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோருக்கும் முதியோருக்கும் இடையே கலந்துரையாடல்கள் இன்றி,  வரலாறோ, வாழ்வோ முன்னோக்கிச் செல்லமுடியாது என்பதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய உரையாடல்களை மீண்டும் துவக்கிவைக்க வேண்டியது, இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரும் சவாலாக உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.

முதியோருக்கும் இளையோருக்கும் இடையே இடம்பெறும் கருத்துப்பரிமாற்றங்களால், இரு தரப்பினருக்கும், மகிழ்வும், மனநிறைவும் கிட்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சீனாவின் Zhengzhou நகர், மற்றும் Henan மாநிலத்தில், பெருமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுடன் தன் ஒருமைப்பாட்டையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதாகவும், மூவேளை செபஉரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பானின் டோக்கியோவில்,   இவ்வெள்ளியன்று துவங்கியுள்ள 32வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு, தன் வாழ்த்துக்களையும், அகில உலக உடன்பிறந்த நிலையின் எடுத்துக்காட்டாக இது விளங்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2021, 12:41