தேடுதல்

Vatican News
ஆர்ஜென்டீனாவின் வர்த்தக மேலாளர்கள் கிறிஸ்தவக் கழகத்தின் 24வது ஆண்டுக்கூட்டம் ஆர்ஜென்டீனாவின் வர்த்தக மேலாளர்கள் கிறிஸ்தவக் கழகத்தின் 24வது ஆண்டுக்கூட்டம் 

வர்த்தக மேலாளர்களின் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

மனித சமுதாயத்தில் வாழ்வோர், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொண்டிருப்பது, அந்த நாட்டு பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றிற்கு அடித்தளமாக இருக்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொருளாதாரம், சமுதாயம் ஆகிய்வற்றைக் குறித்த கிறிஸ்தவக் கண்ணோட்டம், இயேசு வழங்கிய மலைப்பொழிவின் அடிப்படையிலும், மத்தேயு நற்செய்தியின் 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இறுதித்தீர்ப்பு உவமையின் அடிப்படையிலும் உருவாகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 30, இப்புதனன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார்.

ஜூன் 30, ஜூலை 1 ஆகிய இருநாள்கள், ஆர்ஜென்டீனா நாட்டில் வர்த்தக மேலாளர்களின் கிறிஸ்தவக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் 24வது ஆண்டுக்கூட்டத்திற்கு, இஸ்பானிய மொழியில், திருத்தந்தை வழங்கியுள்ள காணொளிச் செய்தி, அக்கூட்டத்தின் ஆரம்ப அமர்வில், ஒளிபரப்பானது.

ஆர்ஜென்டீனா நாட்டின் செல்வம் மிகுந்த வர்த்தகர் என்ரிக் ஷா (Enrique Shaw) அவர்களின் புண்ணிய வாழ்வை ஏற்றுக்கொண்டு, அவரது புனிதர்பட்ட வழிமுறைகள் துவங்குவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில மாதங்களுக்கு முன் உத்தரவு வழங்கியதை, இந்த காணொளிச் செய்தியின் துவக்கத்தில், குறிப்பிட்டு, அந்த இறையடியார், தற்போது நிகழும் வர்த்தகக் கூட்டத்தை வழிநடத்துவாராக என்று கூறியுள்ளார்.

ஒரு நாட்டில் வறுமையுற்றோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்போது, அந்த நாட்டில் இருப்போர் பின்பற்றும் பொருளாதார, வர்த்தக, செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று, திருத்தந்தை தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

மனித சமுதாயத்தில் வாழ்வோர், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொண்டிருப்பது, அந்த நாட்டு பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றிற்கு அடித்தளமாக இருக்கவேண்டும் என்றும், நம்பிக்கையற்ற சூழலில் நிகழும் வர்த்தக முயற்சிகள், சமுதாயத்தை வளர்க்காது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும், துணிவுடன், படைப்பாற்றலுடன் முடிவுகள் எடுக்க அன்னை மரியா உதவி செய்வாராக என்ற கோரிக்கையுடன், தனக்காகச் செபிக்கும்படியும் கூறி, திருத்தந்தை, இக்காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆர்ஜென்டீனா வர்த்தக மேலாளர்களின் கிறிஸ்தவக் கழகம் ஏற்பாடு செய்துள்ள 24வது ஆண்டுக்கூட்டம், "இன்னும் கூடுதலான மனிதாபிமானம் கொண்ட முதலாளித்துவம் நோக்கி" என்ற மையக்கருத்துடன் நடைபெற்றது. 

30 June 2021, 15:47