தேடுதல்

இத்தாலியின் ஜெனோவா நகரில் ILVA தொழிலாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2017 இத்தாலியின் ஜெனோவா நகரில் ILVA தொழிலாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2017  (Vatican Media)

'தொழில் உலகம் உச்சி மாநாடு' - திருத்தந்தை காணொளிச் செய்தி

பெருந்தொற்று கிருமியைக் காட்டிலும், அக்கறையற்ற மனநிலை என்ற மிக கொடுமையான கிருமியால், சமுதாயப் பாதுகாப்பு ஏதுமற்ற மக்களை நலிவுற்ற நிலையில் விட்டுவிடும் ஆபத்து உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொடர்ந்து நம்மை அச்சுறுத்திவரும் இன்றைய நெருக்கடிகளில், பொதுவான நன்மையை நிலைநாட்டுவதற்கு, நாம் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகத் தொழில் நிறுவனமான ILO ஏற்பாடு செய்துள்ள ஓர் உயர்மட்டக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

'தொழில் உலகம் உச்சி மாநாடு' (World of Work Summit) என்ற பெயரில், ஜெனீவாவில், ஜூன் 17, 18 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் மாநாட்டிற்கு, திருத்தந்தை, இஸ்பானிய மொழியில் வழங்கியுள்ள உரையின் காணொளிப்பதிவு, இம்மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ஒளிபரப்பானது.

வரலாறு கண்டிராத வேலை இழப்பு

2020ம் ஆண்டு உலகெங்கும் பரவியிருந்த பெருந்தொற்றின் தாக்கத்தால், இதுவரை உலகம் கண்டிராத அளவு, மனிதர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், மற்றும், ஏனையோரின் வேலை நேரம், ஊதியம் ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவேண்டும் என்ற அவசரத்தில், நாம், முன்பு செய்துவந்ததைப்போல், இலாபம் ஈட்டுதல், நுகர்வுத்திறனை வளர்த்தல், தேசிய வளர்ச்சி போன்ற பழைய வழிகளிலேயே முழுகவனம் செலுத்தி, சமுதாயத்தில் நலிந்தோரைப் புறம்தள்ளும் போக்கைக் தவிர்க்கவேண்டும் என்று, திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.

பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடும் மக்கள்

கோவிட் 19 உருவாக்கியுள்ள நெருக்கடியால், தொழில் உலகில், அடிமட்ட தொழிலாளிகள், எவ்வித சட்ட கட்டமைப்புக்குள்ளும் இணைக்கப்படாத தொழிலாளிகள், குடிபெயர்ந்த, மற்றும் புலம்பெயர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் ஆகியோர், பாதுகாப்பற்ற, கடினமான, மாண்பற்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறையில் பொதுவாகவே அடிமட்டத் தொழிலாளிகள் பாதுகாப்பு பெறுவதில்லை என்ற அநீதி, இந்த பெருந்தொற்று காலத்தில் இன்னும் அதிகமாக, பரவலாக உலகெங்கும் நிலவுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பற்ற இந்த நிலையால், மனித வர்த்தகம், சிறார் தொழில் போன்ற கூடுதல் அநீதிகளும் நிகழ்கின்றன என்று கூறியுள்ளார்.

வறியோரையும் கலந்துபேசி முடிவெடுக்க...

இவ்வாறு, தொழில் உலகில் தற்போது நிலவும் அநீதிகளையும், அவலங்களையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலத்தில், அரசுகள், சமுதாயத்தின் பல்வேறு அமைப்புக்களுடன் கலந்துபேசி முடிவுகள் எடுப்பதை வலியுறுத்துவது, திருஅவையின் ஒரு முக்கியப்பணி என்று கூறியுள்ளார்.

சமுதாயத்தில் மிகவும் நலிந்தோர், இளையோர், குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், பழங்குடியினத்தவர், மிகவும் வறுமையுற்றோர் ஆகிய அனைவரும், முடிவுகள் எடுக்கும் வழிமுறைகளில் இடம்பெறுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது, திருஅவையின் கடமை என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார். .

வயது, நோய், மாற்றுத்திறன், குடிபெயர்தல் போன்ற பல்வேறு காரணிகளால் சமுதாயத்தில், மிகவும் நலிவுற்ற நிலைக்கு உள்ளாகும் மக்களுக்கு சமுதாய பாதுகாப்பு வழங்குவது, திருஅவை மேற்கொள்ளும் இரண்டாவது முக்கியப் பணி என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

அக்கறையற்ற மனநிலை என்ற கிருமி

நாம் தற்போது சந்தித்துவரும் பெருந்தொற்று கிருமியைக் காட்டிலும், அக்கறையற்ற மனநிலை என்ற மிக கொடுமையான கிருமியால், சமுதாயப் பாதுகாப்பு ஏதுமற்ற மக்களை, நலிவுற்ற நிலையில் விட்டுவிடும் ஆபத்து உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, கோவிட்-19 கிருமி மிகத் தெளிவாக நமக்கு உணர்த்தியுள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதார உலகில், 'Great Depression', அதாவது, பெரும் வீழ்ச்சி என்ற நெருக்கடி உருவான வேளையில், முதலீடுகளை செய்த முதலாளிகள் தங்களுக்கு இன்னும் கூடுதலாக இலாபம் சேர்த்துக்கொண்டதையும், அதே வேளையில், தொழிலாளிகள், இந்த வீழ்ச்சியால் துன்புற்றதையும், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், தன் மடலில் கண்டனம் செய்ததை, இச்செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இத்தகைய ஏற்றத்தாழ்வினை சீர்செய்ய உருவாக்கப்பட்ட ILO நிறுவனத்திற்கு, கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி வந்துள்ளது என்பதை, திருத்தந்தை, தன் செய்தியில் நினைவுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில், ஜூன் 17ம் நடைபெற்ற துவக்க அமர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய காணொளிச் செய்தியைத் தொடர்ந்து, தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோசப் பைடன் ஜுனியர், மற்றும் போர்த்துக்கல் நாட்டின் பிரதமர், அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் வழங்கிய செய்திகளும் ஒளிபரப்பாயின.

17 June 2021, 14:23