தேடுதல்

Vatican News
இயேசுவின் திரு இதயம் இயேசுவின் திரு இதயம் 

இயேசுவே, எனது இதயத்தை, உமது இதயம் போன்று அமைத்தருளும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 6, வருகிற ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் திரு இதயத்திற்கு சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சூன் மாதத்தில், நம் இதயங்கள், அன்பு, பொறுமை, இரக்கம், மனத்தாராளம் போன்ற நற்பண்புகளில், மேலும் மேலும் வளருவதற்கு, ஒரு சிறிய இறைவேண்டலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூன் 04, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாகப் பரிந்துரைத்துள்ளார்.

“இயேசுவே, உமது இதயம் போன்று எனது இதயத்தை அமைத்தருளும் என்ற எளிய இறைவேண்டலை, இயேசுவின் திரு இதயத்திற்கு சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சூன் மாதத்தில் அடிக்கடி சொல்வோம், இவ்வாறு நம் இதயங்கள், பொறுமை, மனத்தாராளம், இரக்கம் போன்றவற்றை கூடுதலாகக் கொண்டதாக, மெல்ல மெல்ல, அதேநேரம், நிச்சயமாக மாறும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்தன.

ஆயர்கள் மாமன்றத்திற்கு பெண் ஆலோசகர்

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, Myriam Wijlens என்ற பெண்மணி உட்பட, மூன்று பேரை  ஆலோசகர்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூன் 04, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார். Myriam Wijlens அவர்கள், ஜெர்மனியின் Erfurt பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஜூன் 6, கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா

மேலும், ஜூன் 6, வருகிற ஞாயிறன்று, அகில உலக திருஅவையில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாள் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3, இவ்வியாழனன்று, கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

04 June 2021, 16:00