தேடுதல்

Vatican News
இந்தோனேசிய Kandi ஏரி இந்தோனேசிய Kandi ஏரி  (AFP or licensors)

திருத்தந்தை: ஒருங்கிணைந்த மனித சூழலியல் அவசியம்

சூன் 05, இச்சனிக்கிழமையன்று, 'சூழலியல் அமைப்பை மீள்நிலைப்படுத்துதல்' என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் உலக நாள் சிறப்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சூன் 05, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் உலக நாளை மையப்படுத்தி, சுற்றுச்சூழல் உலக நாள் (#WorldEnvironmentDay) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்திகளை, பதிவுசெய்துள்ளார்.

 “நமது வாழ்வுமுறையை, மற்றும், இப்பூமியின் வளங்களோடு நமக்குள்ள உறவை மாற்றவல்ல ஒருங்கிணைந்த மனிதச் சூழலியல் தேவைப்படுகின்றது. இது, சூழலியல் சார்ந்த விவகாரங்களை மட்டுமல்லாமல், வறியோரின் அழுகுரலுக்குப் பதிலளிக்கும் முழுமனிதரையும் உள்ளடக்கியது” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், சூழலியலை மறுசீரமைப்பு செய்வது குறித்த, இந்த பத்து ஆண்டுகளில், பல்வேறு நிலைகளில், அதாவது, நம்மோடும், மற்றவரோடும், இயற்கையோடும், மற்ற உயிரினங்களோடும் உள்ள உறவிலும், கடவுளோடு ஆன்மீக அளவில் உள்ள உறவிலும், சூழலியல் சமநிலையை நாம் காக்கவேண்டும் என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.  

சுற்றுச்சூழல் உலக நாள் வரலாறு

இயற்கையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் சிறப்பித்துவரும் முக்கிய ஆண்டு நிகழ்வுகளில், சுற்றுச்சூழல் உலக நாளும் ஒன்றாகும்.

1972ம் ஆண்டு சூன் 05ம் தேதி, ஐ.நா. நிறுவனம் Stockholm நகரில், மனிதச் சூழலியல் குறித்த கூட்டம் ஒன்றைத் தொடங்கியது. அதே ஆண்டில், அந்த சூன் 5ம் தேதியையே, ஐ.நா. பொது அவை, சுற்றுச்சூழல் உலக நாளாகவும் அறிவித்தது. இந்த சுற்றுச்சூழல் உலக நாள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1974ம் ஆண்டில் முதன்முதலாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

2021ம் ஆண்டு, சூன் 05, இச்சனிக்கிழமையன்று, 'சூழலியல் அமைப்பை மீள்நிலைப்படுத்துதல்' என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் உலக நாள் சிறப்பிக்கப்பட்டது. கோடிக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கு மீட்டுயிர் கொடுக்கப்படவும், காடுகள், விளைநிலங்கள், மலைகள், கடல்கள் போன்றவை மாசுகேட்டால் சீரழியாமல் காக்கப்படவும் உலக அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு இந்த சுற்றுச்சூழல் உலக நாள் அழைப்பு விடுக்கிறது. 

05 June 2021, 15:30