தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரை (230621) திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரை (230621)  (Vatican Media)

திருத்தந்தையின் பிறரன்பு பணிகளுக்கு உதவ அழைப்பு

பேதுரு காசு என்ற அமைப்பு வழியாக வழங்கப்படும் நிதியுதவி, திருஅவையின் மறைப்பணிக்கு ஆதரவளிக்கின்றது - திருப்பீட பொருளாதார செயலகத்தின் தலைவர், இயேசு சபை அருள்பணி Juan Antonio Guerrero Alves

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிறரன்பு, கிறிஸ்தவரின் இதயத் துடிப்பாகும். ஒருவர் இதயத் துடிப்பு இன்றி எவ்வாறு வாழ முடியாதோ, அவ்வாறே, ஒரு கிறிஸ்தவரும் பிறரன்பு இன்றி வாழ இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

ஜூன் 25, இவ்வெள்ளியன்று, பிறரன்பின் முக்கியத்துவம் பற்றி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ள திருத்தந்தை, பிறரன்பு, கிறிஸ்தவரின் இதயத் துடிப்பாகும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பேதுரு காசு அமைப்புக்கு உதவிகள் தேவை

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், தேவையில் இருக்கும் மக்களுக்கு திருத்தந்தை உதவுவதற்கு, பல்வேறு வழிகளில் ஆதரவு கிடைத்துள்ளவேளை,  ஒற்றுமை, அமைதி, மற்றும், நற்செய்தி அறிவிப்புப்பணி ஆகியவற்றுக்கு, உலகிலுள்ள திருஅவைகளுக்கு திருத்தந்தை உதவுவதற்கும், பேதுரு காசு அமைப்புக்கு ஆதரவுகள் தேவைப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உலகளாவியத் திருஅவைக்கு, திருத்தந்தை நேரிடையாகவும், திருப்பீட தலைமையகம் வழியாகவும், அவர் ஆற்றும் பிறரன்பு, மற்றும், ஏனையப் பணிகளுக்கென, பேதுரு காசு என்ற பெயரில், ஒவ்வோர் ஆண்டும், திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டிய நாள்களில், தலத்திருஅவைகளில் உண்டியல் எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டு ஜூன் 27 வருகிற ஞாயிறு முதல், 29, செவ்வாய், திருத்தூதர்களாகிய, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா வரை, ‘பேதுரு காசு’ நன்கொடைகள் திரட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் திருஅவையைச் சேர்ந்தவர்கள், மற்றும், திருத்தந்தை மீது அன்புசெலுத்துபவர்கள் என்பதை வெளிப்படையாக காட்டும் முறையிலும், இந்த நன்கொடைகளை, குறிப்பாக, இந்த நெருக்கடி காலத்தில், தாராளமனத்துடன் வழங்குமாறு திருப்பீடம், கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பேதுரு காசு என்பது பற்றி கருத்து தெரிவித்த, திருப்பீட பொருளாதார செயலகத்தின் தலைவர், இயேசு சபை அருள்பணி  Juan Antonio Guerrero Alves அவர்கள், இந்த நிதியுதவி, திருஅவையின் மறைப்பணிக்கு ஆதரவளிக்கின்றது என்று கூறினார்.

இந்த நன்கொடைகளை, ஆண்டு முழுவதும், பேதுரு காசு https://www.obolodisanpietro.va என்ற இணையதளம் வழியாகவும் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வத்திக்கான் வங்கி எனப்படும் IOR நிறுவனம் வழியாகவும் இந்த நன்கொடைகளை அனுப்பலாம்.

IBAN VA78001001000000019887028 per trasferimenti in EURO

IBAN VA510010010000000000019887029 per spedizioni in U.S.$

மின்னஞ்சல்: obolo@spe.va. இதில், Ufficio Obolo, Segreteria per l’Economia, 00120 Città del Vaticano என எழுதவேண்டும்.

25 June 2021, 15:37