தேடுதல்

சென்னையில் கோவிட்-19 சிகிச்சை மையம் சென்னையில் கோவிட்-19 சிகிச்சை மையம்  (AFP or licensors)

இந்தியாவுக்கு சுவாசக் கருவிகள் திருத்தந்தை நன்கொடை

திருத்தந்தையின் தர்மச் செயல்கள் அலுவலகம், இந்தியா உட்பட, 9 நாடுகளுக்கு, கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்கு உதவும் சுவாசக்கருவிகளை அனுப்பியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடந்தகாலத்தில் எதிர்கொண்ட தோல்விகள், மற்றும், வருங்காலத்தின் மீதுள்ள அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில், நாம் கடவுளின் அன்புக்குரிய பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 18, இவ்வெள்ளியன்று  தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் எழுதியுள்ள, ஒரு செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

“நம் கடந்தகால வேதனைகள், தோல்விகள், மற்றும், வருங்காலம் பற்றிய அச்சங்கள், அக்கறைகள் ஆகியவற்றைவிட, நமது அனைத்து சக்திகள், மற்றும், பலவீனங்கள் வலிமைவாய்ந்தவையாக இருக்கின்றன. இவற்றுக்கு அடிப்படையாக, மிகப்பெரும் ஓர் உண்மை உள்ளது, அதுவே நாம் கடவுளின் அன்புக்குரிய பிள்ளைகள் என்பதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் வலைப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மிக ஏழை நாடுகளுக்கு சுவாச கருவிகள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான திருப்பீட அலுவலகம், இந்தியா உட்பட, ஒன்பது நாடுகளுக்கு, கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்கு உதவும் மருத்துவக்கருவிகளை, ஜூன் 17 இவ்வியாழனன்று அனுப்பியுள்ளது.

பணக்கார நாடுகளில், கோவிட்-19 தடுப்பூசிகள் தீவிரமாக வழங்கப்பட்டுவரும்வேளை, உலகின் பல வறிய நாடுகளில், பெருந்தொற்று தொடர்பான நலவாழ்வு இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், சுவாசக்கருவிகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவை, மற்ற உயிர்காக்கும் கருவிகளோடு, தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், அந்த அலுவலகம் கூறியுள்ளது.

அந்நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கருவிகள், அத்தூதரகங்கள் தேர்ந்தெடுத்துள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும், அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு 6, பிரேசிலுக்கு 6, கொலம்பியாவுக்கு 5, அர்ஜென்டீனாவுக்கு 5, சிலே நாட்டிற்கு 4, தென்னாப்ரிக்காவுக்கு 4, பொலிவியாவுக்கு 3, சிரியாவுக்கு 3, பாப்புவா நியுகினிக்கு 2 என, மொத்தம் 38 மருத்துவக்கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

18 June 2021, 15:07