தேடுதல்

பிரேசில் பாத்ரே வியான்னா கல்லூரி மாணவர்கள் பிரேசில் பாத்ரே வியான்னா கல்லூரி மாணவர்கள் 

பள்ளிகள், மாணவர்களின் மனச்சான்றை உருவாக்கும் இடங்கள்

மக்கள் மத்தியில் நிலவும் வெட்கத்துக்குரிய சமத்துவமற்ற நிலைகளைக் களையும் முறைகளில், மாணவர்களை உருவாக்கும் இடங்களாக கத்தோலிக்கப் பள்ளிகள் அமைந்திருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூன் 11, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழாவை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் தூய்மைமிகு இதயத்தை நம்பிக்கையோடு உற்றுநோக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

“இயேசு, கனிவும் மனத்தாழ்மையும் உடையவர், அவர், நாம் மனம் மாறச் செய்கிறார், மற்றும், மனத்தாராளத்தோடு, கடவுளையும், அயலவரையும் அன்புகூர நமக்குக் கற்றுத்தருகிறார் என்று, இப்பெருவிழா நாளில், குறிப்பாக, இயேசுவின் தூய்மைமிகு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூன் மாதத்தில், அடிக்கடி சொல்வோம்” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழாவன்று, அருள்பணியாளர் புனிதமடைய செபிக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

பள்ளிகள் மனச்சாட்சிகளை உருவாக்க...

இன்னும், இலத்தீன் அமெரிக்க இயேசு சபை பள்ளிகளின் கூட்டமைப்பு (FLACSI) ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி, ஜூன் 10, இவ்வியாழன் மாலையில் காணொளிச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மனத்தாராளம் மற்றும், சமத்துவப் பண்புகளில் மாணவர்களை உருவாக்கும் இடங்களாக பள்ளிகள் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள், காலங்களின் அறிகுறிகளைத் தேர்ந்துதெளிவதற்கும், எழுதப்படிக்கவும் கற்றுக்கொடுக்கும் இடங்களாக மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் நிலவும் வெட்கத்துக்குரிய சமத்துவமற்ற நிலைகளைக் களையும் முறைகளில் அவர்களை உருவாக்கும் இடங்களாகவும், கத்தோலிக்கப் பள்ளிகள் அமைந்திருக்கவேண்டும் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

மாணவர்கள், தங்களின் காயங்களை மட்டுமல்லாமல், மற்றவரின் காயங்களையும் குணப்படுத்தத் தெரிந்தவர்களாக வளரவும் பள்ளிகள் உதவவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, மற்ற மனிதரோடும், படைப்போடும் தொடர்புகொள்ள நமக்குக் கற்றுக்கொடுத்த இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, தெருக்களில் சென்று, வறியோர் மற்றும், புறக்கணிக்கப்பட்டோரைச் சந்திக்கவும், மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இலத்தீன் அமெரிக்கா, மற்றும், கரீபியன் பகுதியின் 19 நாடுகளில் இயேசு சபையினர் நடத்தும் ஏறத்தாழ 92 பள்ளிகளின் கூட்டமைப்பு, 2001ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. FLACSI

எனப்படும் இந்த கூட்டமைப்பு, கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் தன் தலைமையகத்தைக் கொண்டிருக்கிறது.

11 June 2021, 15:23