தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

புனித பூமி, மியான்மாரில் அமைதி நிலவ திருத்தந்தை செபம்

மியான்மாரில், கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற காயா மாநிலத்தில், கடந்த இரு வாரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களால், மூன்று ஆலயங்கள் சேதமடைந்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமி, மற்றும், மியான்மார் நாட்டில் அமைதி நிலவுவதற்காக, நாம் அனைவரும் ஆண்டவரை மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூன் 08, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார்

ஜூன் 8, இச்செவ்வாய், பகல் ஒரு மணிக்கு, அனைவரும், அவரவர் மத மரபுகளுக்கு இயைந்தவகையில் "உலகின் அமைதிக்காக, ஒரு நிமிடத்தை" அர்ப்பணிக்குமாறு,  அனைத்துலக கத்தோலிக்க கழகம் அழைப்பு விடுத்துள்ளது. எனவே, புனித பூமி, மற்றும் மியான்மார் நாட்டிற்காக, சிறப்பாக இறைவேண்டல் செய்வோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.

உலகில், குறிப்பாக, புனித பூமி, மற்றும் மியான்மார் நாட்டில் அமைதி நிலவ அனைவரும் இறைவனை மன்றாடுமாறு அடிக்கடி விண்ணப்பித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூன் 6, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின்னும், இதே கருத்துக்காகச் செபிக்குமாறு உலகினரைக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமோர் ஆலயம் தாக்கப்படல்

இதற்கிடையே, மியான்மாரின் கிழக்குப் பகுதியில், கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற காயா மாநிலத்தில், கடந்த இரு வாரங்களில் இராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதல்களால், மூன்று ஆலயங்கள் சேதமடைந்துள்ளன என்று, தலத்திருஅவை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சூன் 06, இஞ்ஞாயிறு காலையில், Doungankha கிராமத்தின் அமைதியின் அரசி அன்னை மரியா ஆலயத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட பீரங்கிக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில், அவ்வாலயத்தின் சுவர்களும், சன்னல்களும், கடுமையாய்ச் சேதமடைந்துள்ளன.

மியான்மாரில் குண்டு வீச்சால் சேதமடைந்துள்ள ஆலயம்
மியான்மாரில் குண்டு வீச்சால் சேதமடைந்துள்ள ஆலயம்

அப்பகுதியின் கத்தோலிக்கர், மற்ற இடங்களிலுள்ள உறவினர் வீடுகள், மற்றும், காடுகளில் ஏற்கனவே மறைந்து வாழ்கின்றவேளை, அங்கு, சில அருள்பணியாளர்களும், வயது முதிர்ந்த அருள்சகோதரிகளுமே உள்ளனர் என்றும், தலத்திருஅவை அதிகாரிகள் யூக்கா செய்தியிடம் கூறியுள்ளனர்.

இவ்வாண்டு மே 23ம் தேதி இரவில், Kantharyar கிராமத்தின் இயேசுவின் திரு இதய ஆலயமும், மே 26ம் தேதி இரவில், Demoso நகரின் புனித யோசேப்பு ஆலயமும் இராணுவத்தால் கடுமையாய்த் தாக்கப்பட்டன. மேலும், அத்தாக்குதல்களில் 4 கத்தோலிக்கர் உயிரிழந்தனர், மற்றும், பலர் காயமுற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்களும், வழிபாட்டுத் தலங்களும், சமய நிறுவனங்களும் பாதுகாக்கப்படுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். 

மியான்மாரின் Kachin, Karen, Chin, Kayah மற்றும்,Shan மாநிலங்களில், ஏற்கனவே, 1,75,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கூறியுள்ளது. (UCAN)

திருப்பலியின் பயன்

மேலும், திருப்பலியின் முக்கியத்துவம் குறித்து, மற்றுமொரு டுவிட்டர் செய்தியை பதிவுசெய்துள்ள திருத்தந்தை, திருப்பலிக் கொண்டாட்டங்கள் இந்த உலகை மாற்றும் அளவுக்கு சக்தியைக் கொண்டுள்ளன. எவ்வாறெனில், நம்மையே நாம் மாற்றிக்கொள்ள நம்மையே அனுமதிக்கவும், மற்றவருக்கு உடைக்கப்பட்ட அப்பமாக நாம் மாறவும், திருப்பலி உதவுகின்றது என்ற சொற்கள், அதில் வெளியாயின.

08 June 2021, 14:43