தேடுதல்

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா 

'ஆண்டவரின் உடல்' – திருத்தந்தையின் டுவிட்டர் பதிவு

"கிறிஸ்துவை உணவாய் உட்கொண்டு ஊட்டம்பெறும் யாரும், தினசரி உணவின்றி வாடுவோர் மீது அக்கறையின்றி இருக்க இயலாது" - திருத்தந்தையின் டுவிட்டர் பதிவு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா, ஜூன் 3, இவ்வியாழனன்று வத்திக்கானில் சிறப்பிக்கப்படுவதையும், இத்திருநாள், அகில உலக திருஅவையில் ஜூன் 6, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், வளாகத்தில் கூடியிருந்தோருக்கு நினைவுறுத்தினார்.

நம் வாழவுப்பாதையை ஒளிமயமாக்கும் அருள் மற்றும் ஒளியின் ஊற்றாக விளங்கும் திருநற்கருணையில், அன்பையும், மகிமையையும் கண்டுகொள்வோமாக என்ற ஆசி மொழிகளை, திருத்தந்தை, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 3, இவ்வியாழன், வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை, 'ஆண்டவரின் உடல்' என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்டுள்ளார்.

"திருஅவையின் வாழ்வுக்கு, அன்பின் ஊற்றாக விளங்கும் திருநற்கருணை, பிறரன்பு, மற்றும் ஒருங்கிணைப்பின் கல்விக்கூடம். கிறிஸ்துவை உணவாய் உட்கொண்டு ஊட்டம்பெறும் யாரும், தினசரி உணவின்றி வாடுவோர் மீது அக்கறையின்றி இருக்க இயலாது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஜூன் 3, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3.283 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

03 June 2021, 14:35