தேடுதல்

Vatican News
Kamloops மாணவர் தங்கும் விடுதியின் முன்னால், இறந்த குழந்தைகளை நினைவூட்டும் பொம்மைகள் Kamloops மாணவர் தங்கும் விடுதியின் முன்னால், இறந்த குழந்தைகளை நினைவூட்டும் பொம்மைகள்   ((c) Jennifer Gauthier)

கனடா தங்கும் விடுதி நிகழ்வு குறித்து திருத்தந்தை அதிர்ச்சி

கனடா நாட்டின் அனைத்து குடிமக்களுடன் உரையாடல், ஒருவருக்கொருவர் மதிப்பு, மற்றவர்களின் உரிமைகளையும் கலாச்சார மதிப்பீடுகளையும் அங்கீகரித்தல் என்ற பாதையில் இணைந்து நடைபோட அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கனடா நாட்டில் பூர்வீகக் குடிமக்களுக்கென துவக்கப்பட்ட மாணவர் தங்கும் விடுதி ஒன்றில், சிறார்களின் புதைக்கப்பட்ட சடலங்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையொட்டி, தன் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமையன்று, நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு, மற்றும் குணப்படுத்தலின் பாதைக்குரிய அர்ப்பணத்தில், உண்மைகளைக் கண்டறிய அரசு, மற்றும் மத அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Kamloops பூர்வீகக் குடிமக்களின் மாணவர் தங்கும் விடுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 215 குழந்தைகளின் சடலங்கள் குறித்து, ஆழ்ந்த மனவேதனையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியால் பெரும் துயரடைந்துள்ள கனடா நாட்டு மக்களுடனும், அந்நாட்டு ஆயர்களுடனும் தன் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

இதற்கிடையே, கனடா நாட்டின் அனைத்து குடிமக்களுடன் உரையாடல், ஒருவருக்கொருவர் மதிப்பு, மற்றவர்களின் உரிமைகளையும் கலாச்சார மதிப்பீடுகளையும் அங்கீகரித்தல் என்ற பாதையில் இணைந்து நடைபோட வேண்டியதை, தற்போதைய துன்பகரமானச் சூழல்கள் உணர்த்தி நிற்கின்றன என ஏற்கனவே எடுத்துரைத்துள்ளனர், கனடா ஆயர்கள்.

பூர்வீகக் குடிமக்களின் குழ்ந்தைகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், அரசால் வலுக்கட்டாயமாக தங்கும் விடுதிகளில் கொணரப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவிகள், அரசாலும் சில கிறிஸ்தவ அமைப்புக்களாலும் வழங்கப்பட்டது.

கடந்த மாதம் மின்காந்த கருவியின் உதவியுடன் Kamloops வளாகத்தில், பூமிக்கடியில் கதிர்கள் செலுத்தப்பட்டு, அங்கு, குவியலாக 250 சிறார்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி, தற்போது முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பூர்வீகக் குடிமக்களின் குழந்தைகளுக்கான இந்த Kamloops தங்கும் விடுதி, 1890ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டுவரை, கனடா கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்பட்டு, பின்னர், அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்டு, 1978ம் ஆண்டு மூடப்பட்டது.

06 June 2021, 14:14