தேடுதல்

Vatican News
திருஅவை சட்டத் தொகுப்பு திருஅவை சட்டத் தொகுப்பு 

திருஅவையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம்

குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் ஆயர்கள், நீதியைக் கடைப்பிடித்தல், குற்றவாளி திருந்த உதவுதல், திருஅவைக்கு ஏற்பட்ட அவமானங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுதல், ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனிதப் பலவீனத்தால் குற்றம் இழைத்தவர்களின் மனக்காயங்களைக் குறைக்கவும், கடுமையான தீமைகள் கூடுதலாக இடம்பெறுவதை தக்கநேரத்தில் தவிர்க்கவும் என, திருஅவை சட்டத் தொகுப்பின் பகுதி VIல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

“Pascite Gregem Dei” அதாவது, “கடவுளின் மந்தையை மேய்ப்பாயாக” எனப்படும், திருத்தூது கொள்கை விளக்க ஏட்டின் வழியாக, திருஅவை சட்டத் தொகுப்பின் பகுதி VIல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் சீர்திருத்தங்கள், குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.   

“உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை கட்டாயத்தினால் அல்ல, மாறாக, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்” (காண்க.1 பேதுரு 5:2) என்ற புனித பேதுருவின் வார்த்தைகளால் “Pascite Gregem Dei” ஏட்டை துவக்கியுள்ள திருத்தந்தை, திருஅவையில் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்த சட்டத்தில், மாற்றங்களை அறிவித்துள்ளார்.

உலகளாவியத் திருஅவையின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எனவும், இறை மக்கள், மற்றும், அவர்களுக்குப் பொறுப்பான ஆயர்களை ஒன்றிணைக்கும் விதமாக, திருஅவையில் நூற்றாண்டுகளாக நன்னெறி விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில் கோணலானவைகளை நேராக்கும் பணிக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்கு, ஒரு தந்தைக்கு, பிறரன்பும், இரக்கமும் தேவைப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, திருஅவை, கிறிஸ்தவ சமுதாயம், மற்றும், குற்றங்களுக்குப் பலியானவர்களுக்கு மட்டும் பிறரன்பைக் காட்டுவதோடு நிறுத்திவிடாமல், குற்றம் புரிந்தவர்கள் மீது இரக்கம் காட்டி, அவர்கள் தங்களின் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், திருஅவை உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.

தண்டனைகள் வழங்குவதில், பிறரன்பைச் செயல்படுத்துவதற்கும், நீதி தேவைப்படும் சூழல்களுக்கும் இடையே, திருஅவையில் புரிந்துணர்வு குறைவுபட்டதால், கடந்த காலத்தில் நிறைய பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை,  அத்தகைய போக்கு, விசுவாசிகள் மத்தியில் குழப்பமும், அவமானமும் இடம்பெற காரணமாயின என்று கூறியுள்ளார். 

எனவே, ஆயர்கள், குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் முறையை சரியாகச் செய்யாவிட்டால், அவர்கள், தங்களின் பணியை முறையாகவும் பிரமாணிக்கமாகவும் ஆற்றவில்லை என கருதப்படும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதியைக் கடைப்பிடித்தல், குற்றவாளி திருந்த உதவுதல், அவமானங்களுக்குப் பிராயச்சித்தம் ஆகிய மூன்றிலும் ஆயர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜூன் 01, இச்செவ்வாயன்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த திருத்தூது கொள்கை விளக்க ஏட்டில், 2021ம் ஆண்டு மே 23ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார். இதன் விதிமுறைகள், இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று அறவிக்கப்பட்டுள்ளது

01 June 2021, 15:17