தேடுதல்

Vatican News

'சமுதாய நட்பு' – திருத்தந்தையின் ஜூலை மாத இறைவேண்டல்

சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களில் மோதல்கள் இடம்பெறும் இத்தருணத்தில், உரையாடலையும், நட்பையும் கட்டியெழுப்பும் தீவிர முயற்சிகளில், ஆண்களும், பெண்களும், ஈடுபட இறைவேண்டல் செய்வோமாக

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'சமுதாய நட்பு' என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஜூலை மாத இறைவேண்டல் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களில் மோதல்கள் இடம்பெறும் இத்தருணத்தில், உரையாடலையும், நட்பையும் கட்டியெழுப்பும் தீவிரமான, துணிவுள்ள முயற்சிகளில், ஆண்களும், பெண்களும், ஈடுபடவும், பகைமைக்கும், போருக்கும், இடம்தராத வண்ணம், அவர்கள், உதவிக்கரங்கள் நீட்டவும், நாம் இறைவேண்டல் செய்வோமாக” என்ற விண்ணப்பத்தை, திருத்தந்தை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும், திருத்தந்தை வெளியிடும் இறைவேண்டல் கருத்துக்களை, 'The Pope Video' என்ற காணொளியின் வழியே வெளியிட்டுவரும் திருத்தந்தையின் திருத்தூது இறைவேண்டல் பணிக்குழு, ஜூலை மாதத்திற்கென திருத்தந்தை விடுத்துள்ள இறைவேண்டல் கருத்தை, ஜூன் 30 இப்புதனன்று வெளியிட்டது.

அரசுகளும், அடிப்படைவாதக் குழுக்களும் மேற்கொள்ளும் தாக்குதல்களும் மோதல்களும் காட்டப்படும் இந்த காணொளித் தொகுப்பில், சாதாரண, எளிய மனிதர்கள், ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதரவாக செயல்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காட்சிகளின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பானிய மொழியில் வழங்கும் கருத்துக்கள், பின்னணியில் இவ்வாறு ஒலிக்கிறது:

"நண்பர்களைக் கண்டவர்கள், புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள் என்று விவிலியம் சொல்கிறது. நாம் அனைவரும் இணைந்து நலமுடன் வாழ்வதற்கு, நமது நண்பர்கள் குழுக்களைத் தாண்டி, சமுதாய நட்பை கட்டியெழுப்ப ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.

மிகவும் வறுமைப்பட்ட, நலிவுற்ற மனிதர்களோடு நிகழும் சந்திப்பு புதுப்பிக்கப்படவேண்டும். நம்மை அழிவுக்கு உள்ளாக்கும் சமுதாயப் பகைமையிலிருந்து விலகிச் செல்லவேண்டும்.

இன்றைய சமுதாயம், அரசியல் மற்றும் ஊடகம், எதிரிகளை உருவாக்கி, அவர்களை வெற்றிக்கொள்ளும் விளையாட்டை நடத்திவரும் வேளையில், சந்திப்பையும், நட்பையும் வளர்ப்பது எளிதல்ல. உலக எதார்த்தங்களை புதிய வழியில் காண்பதற்கு உரையாடல் சிறந்ததொரு பாதை.

சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களில் மோதல்கள் இடம்பெறும் இத்தருணத்தில், உரையாடலையும், நட்பையும் கட்டியெழுப்பும் தீவிரமான, துணிவுள்ள முயற்சிகளில், ஆண்களும், பெண்களும், ஈடுபடவும், பகைமைக்கும், போருக்கும், இடம்தராத வண்ணம், அவர்கள், உதவிக்கரங்கள் நீட்டவும், நாம் இறைவேண்டல் செய்வோமாக"

30 June 2021, 15:41