தேடுதல்

திருத்தந்தையின் ஜூன் செபக் கருத்து: “திருமணத்தின் அழகு”

“ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆதரவுடன் திருமணத்திற்குத் தயாராகும் இளையோர், அன்பு, தாராளமனம், நம்பகத்தன்மை, மற்றும், பொறுமை ஆகியவற்றில் வளரும்படியாக மன்றாடுவோம்” – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வாழ்வு முழுவதும் நிலைத்திருக்கவேண்டிய திருமண வாழ்வுப் பயணத்தில், கணவனும், மனைவியும் தனியாக இல்லை, அவர்களோடு இயேசு உடன்பயணிக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 01, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

“திருமணத்தின் அழகு” என்ற கருத்தை மையப்படுத்தி, ஜூன் மாத செபக்கருத்து பற்றிய தன் சிந்தனைகளை, காணொளிச் செய்தி வழியாக, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணம் செய்துகொள்வது, மற்றும், ஒருவர் தன் வாழ்வைப் பகிர்ந்துகொள்வது, மிகவும் அழகானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் 19ம் தேதி சிறப்பு குடும்ப ஆண்டு துவக்கப்பட்டுள்ளதையொட்டி, திருமணம், மற்றும், குடும்ப வாழ்வு, ஆகிய இவ்விரண்டின் அழகையும், முக்கியத்துவத்தையும், திருத்தந்தை இம்மாதச் செபக்கருத்தில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

திருமணம் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம்

இந்த இன்னல்நிறைந்த காலத்தில் இளையோர் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று சிலர் கூறுவது உண்மையா என்ற கேள்வியோடு, தன் காணொளிச் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணம் செய்து கொள்வதும், அவ்வாழ்வுப் பயணத்தில் ஒருவர் தன் வாழ்வை அடுத்தவரோடு பகிர்ந்துகொள்வதும் மிகவும் அழகானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே திருமண வாழ்வு அழைப்பிற்குச் செவிமடுப்பது மதிப்புமிக்கது என்றும், அந்த அழைப்பு, வெறும் சமுதாயச் செயல் அல்ல, மாறாக, அது இதயத்திலிருந்து பிறப்பதாகும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இளையோர் திருமண வாழ்வைத் தேர்ந்துகொள்ள ஊக்கப்படுத்தியுள்ளார்.

“ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆதரவுடன் திருமணத்திற்குத் தயாராகும் இளையோர், அன்பு, தாராளமனம், நம்பகத்தன்மை, மற்றும், பொறுமை ஆகியவற்றில் வளரும்படியாக” இந்த ஜூன் மாதத்தில், நாம் அனைவரும் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

01 June 2021, 15:48