தேடுதல்

மியான்மார் அகதிகள் மியான்மார் அகதிகள்   (AFP or licensors)

புலம்பெயரும் மக்களை நோக்கி இதயங்கள் திறக்கப்பட...

புலம்பெயர்வோரின் துயரங்களையும் மகிழ்வையும் பகிர்ந்துகொண்டு, மனிதகுல சமுதாயத்தின் ஒரு பெரிய குடும்பமாக மாறுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் புலம்பெயர்ந்துள்ள, மற்றும் பசியால் வாடும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்ற அந்நாட்டு ஆயர்களின் குரலோடு தன் குரலையும் இணைப்பதாக, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரைக்குப்பின் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயரும் மக்களை நோக்கி நம் இதயங்கள் திறந்திட இயேசுவின் இதயம் நமக்கு உதவுவதாக என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, மியான்மார் நாட்டிற்கு அமைதி திரும்புவதாக என்ற ஆவலையும் வெளியிட்டார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'புலம்பெயர்ந்தோர் நாள்' ஜூன் 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது குறித்து, தன் மூவேளை செபவுரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயரும் மக்களை நோக்கி நம் இதயங்கள் திறக்கப்படட்டும் என விண்ணப்பித்தார்.

இவ்வாண்டின் புலம்பெயர்ந்தோர் நாளுக்கென தெரிவிசெய்யப்பட்டுள்ள, 'ஒன்றிணைந்து நாம் குணம்பெறுவோம், கற்றுக்கொள்வோம், ஒளிர்வோம்' என்ற மையக்கருத்தைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்வோரின், தாங்கும் தன்மையுடன்கூடிய மனஉறுதியிலிருந்து கற்றுக்கொள்ளும் நாம், அவர்களின் துயரங்களையும் மகிழ்வையும் பகிர்ந்துகொண்டு, மனிதகுல சமுதாயத்தின் ஒரு பெரிய குடும்பமாக மாறுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

20 June 2021, 13:33