தேடுதல்

Vatican News
FAO கட்டிடத்தில் திருத்தந்தை (கோப்பு படம்) FAO கட்டிடத்தில் திருத்தந்தை (கோப்பு படம்) 

விவசாயிகளே உணவு பற்றாக்குறைக்கு உள்ளாகும் முரண்பாடு

திருத்தந்தை: அக்கறையின்மை எனும் கலாச்சாரத்தை ஒதுக்கிவைத்து, அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பதோடு, உடன்பிறந்த உணர்வு, கல்வி, கலந்துரையாடல், மற்றும் சரிநிகர்த்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றால் நலஆதரவு, பொருளாதாரம், மற்றும் சமுதாய நெருக்கடிகளை பெரிய அளவில் சந்தித்துவரும் இன்றைய உலகில் உணவு பாதுகாப்பு, மற்றும் சத்துணவு பற்றாக்குறை குறித்து ஐநாவின் உணவு, மற்றும் வேளாண் நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 14, இத்திங்கள் முதல் ஜூன் 18 வெள்ளிக்கிழமை வரை, உரோம் நகரில் இடம்பெறும் உலக உணவு, மற்றும் வேளாண் நிறுவனத்தின் 42வது கூட்டத்திற்கு தலைமையேற்றிருக்கும் போலந்து நாட்டின் காலநிலை, மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Michał Kurtyka அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று அனுப்பியுள்ள செய்தியில், உணவு பாதுகாப்பும் சத்துணவின்மையும் இன்று மிகப்பெரும் சவாலாக இருந்துவருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளின் முயற்சிக்கு வெற்றி கிட்டியுள்ளபோதிலும், இன்னும் நம் சகோதரர் சகோதரிகளுள் பலர், போதிய உணவையோ, தரமான உணவையோ பெற முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது, என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த 5 ஆண்டுகளிலேயே உணவு பாதுகாப்பின்மையால் துன்புற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது கடந்த ஆண்டில்தான் என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதல்கள், தீவிர காலநிலை மாற்றங்கள், தற்போதைய நலஆதரவு நெருக்கடியுடன் இணைந்த பொருளாதார நெருக்கடிகள் என்பவை, எண்ணற்ற மக்களின் பசிக்கும், பஞ்சத்திற்கும் காரணமாக மாறி, நிலைமைகள் இன்னும் கீழ்நிலைக்குச் செல்லலாம் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளார்.

வருபங்காலத் தலைமுறையை மனதில்கொண்டு, அனைவருக்கும் வளங்கள் பகிரப்படுவதாக, இலாப நோக்கமற்றதாக, பொதுநலனை மையம் கொண்டதாக, சுற்றுச்சூழலை மதிப்பதாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பமும் திருத்தந்தையால் அச்செய்தியில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கும் விவசாயிகளே உணவு பற்றாக்குறைக்கு உள்ளாகிறார்கள் என்ற முரண்பாட்டையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக ஏழைகளில் நான்கில் மூன்று பகுதியினர் கிராமங்களில் வாழ்வதாகவும், சொந்த நிலமின்மை, சந்தைக்கு பொருட்களை நேரடியாக எடுத்துச்செல்ல முடியாமை, போதிய நிதியின்மை, கட்டமைப்பு முறைகளும், தொழில்நுட்பங்களும் இன்மை போன்றவைகளால் கிராமப்புற விவசாயிகள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலைகளிலிருந்து நாம் வெற்றியுடன் வெளிவந்து புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப, அக்கறையின்மை எனும் கலாச்சாரத்தை ஒதுக்கிவைத்து, அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பதோடு, சகோதரத்துவ உணர்வு, கல்வி, கலந்துரையாடல், மற்றும் சரிநிகர்த்தன்மையை ஊக்குவிக்கவேண்டும் எனவும், இச்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்

14 June 2021, 15:46