தேடுதல்

வறியோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் வறியோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள்

புதிய வறுமை நிலைகளை எதிர்த்துப் போரிடுவதற்குரிய மனமாற்றம், மற்றும் அணுகுமுறைகளின் தேவைகளை வலியுறுத்தும் திருத்தந்தையின் உலக வறியோர் தினச் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

இவ்வாண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள ஐந்தாவது உலக வறியோர் தினத்திற்கு, 'ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள்' (மாற் 14: 7) என்ற தலைப்புடன் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 14, இத்திங்களன்று திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி, புதிய வறுமை நிலைகளை எதிர்த்துப் போரிடுவதற்குரிய மனமாற்றம் மற்றும் அணுகுமுறைகளின் தேவைகளை வலியுறுத்துவதாக உள்ளது.

திருவழிபாட்டு பொதுக்காலத்தின் முப்பத்து மூன்றாவது ஞாயிறன்று சிறப்பிக்கப்பட உள்ள இந்த உலக வறியோர் தினத்திற்கு, பெத்தானியாவில் சீமோனின் வீட்டில் இயேசுவின் பாதங்களை விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் ஒரு பெண் கழுவியபோது எழுந்த விவாதத்தில், இயேசு  வழங்கிய பதிலைக்கொண்டு இச்செய்தியின் தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பெண்ணின் செயலை இயேசு ஏற்றுக்கொண்டது, ஏழைகள், மற்றும் ஒடுக்கப்பட்டோரின் சார்பில் அதனை அவர் ஏற்றுக்கொண்டதாக நோக்கப்படவேண்டும், ஏனெனில் அவர்களின் பிரதிநிதியாக இயேசு இருந்தார் என, தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு அப்பெண்ணின் செயலை ஏற்றுக்கொண்டதும், இது குறித்து எழுந்த விவாதங்களும், இயேசுவுக்கும், ஏழைகளுக்கும்,நற்செய்தி அறிவிப்புக்கு இடையை நிலவும் நெருங்கிய தொடர்பு குறித்த சிந்தனைகளைத் தருகின்றன என மேலும் கூறியுள்ளார்.

ஏழ்மை என்பது விதியின் பயன் அல்ல, மாறாக, இறைவன் நம்முடன் இருப்பதன் உறுதியான அடையாளம் என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையின் முகத்தைக் கண்டுகொள்ள ஏழைகள் நமக்கு உதவுகிறார்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிறரன்பு நடவடிக்கைகள், மற்றும் ஒருவருக்கொருவர் பகிரும் நிலை உருவாக்கும் உடன்பிறந்த உணர்வு, ஆகியவைகள் குறித்து தன் செய்தியில் விளக்கமளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய உலகில் காணப்படும் பல்வேறு வகையான வறுமை நிலைகளை மனதில் கொண்டு, அவைகளை எதிர்கொள்ள நம் வாழ்வு முறைகளை நம் விசுவாசத்திற்கு இயைந்ததாக மாற்றியமைக்கவேண்டும் எனற அழைப்பையும் விடுத்துள்ளார் திருத்தந்தை.

கோவிட் பெருந்தொற்றால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் நிலை அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராமுகத்தை எதிர்கொள்ளும் ஏழைகளுக்கு நாம் எவ்வகையில் பதில் வழங்கப்போகிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஏழைகள் நம் கதவுகளை வந்து தட்டவேண்டும் என நாம் காத்திருக்காமல், அவர்களின் வீடுகளில், மருத்துவமனைகள், மற்றும் தெருக்களில் நாமே முன்சென்று அவர்களை சந்தித்து அவர்களின் தேவையறிந்து உதவுவோம் என்ற அழைப்பையும் விடுத்து, உலக வறியோர் நாளுக்கான தன் செய்தியை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

14 June 2021, 15:53