தேடுதல்

Vatican News
கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

நம்மிடம் நிலவும் தனித்துவங்களை கொண்டாடும் அதே வேளையில், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு செவிமடுத்து, நாம் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதற்கு முயலவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலத்தில் இவ்வுலகம் பல வழிகளில் இணைந்துவரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், கிறிஸ்தவர்கள் நடுவிலும் ஒன்றிப்பும், ஒருங்கிணைப்பும் நிகழ்வது முக்கியம் என்பதை உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

கான்ஸ்டான்டினோபிளை தலைமைப்பீடமாகக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகள், ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் திருநாளன்று, வத்திக்கானுக்கு வருகை தரும் மரபையொட்டி, இவ்வாண்டு வருகை தந்துள்ள பிரதிநிதிகள் குழுவை, திருத்தந்தை, ஜூன் 28, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்தார்.

மிக முக்கிய பாடம், பணிவு

இந்த பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் நேரத்தில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடம் பணிவு என்பதை, இச்சந்திப்பின்போது வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிவின்றி நாம் பயணித்தால், மீண்டும் பழைய தவறுகளை செய்வதற்கு வழியாகும் என்று எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நெருக்கடியும், நம்மை ஆழ்மன ஆய்வுக்கு இட்டுச்செல்கிறது என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற பாதையில் நாம், நமது பாதுகாப்பு நிலைகளை விட்டு வெளியேறி, அடுத்தவரைச் சந்திக்கும் உள்ளத்தைப் பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தனித்துவங்களும், வேற்றுமையில் ஒற்றுமையும்

நம்மிடம் நிலவும் தனித்துவங்களை கொண்டாடும் அதே வேளையில், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு செவிமடுத்து, நாம் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதற்கு முயலவேண்டும் என்பதை, திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதிநிதிகளுக்கு தன் நன்றியை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் வழியாக, தன் சகோதரரான, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களுக்கு, தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

ஜூன் 29, நவம்பர் 30 சந்திப்புகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் சார்பாக, வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் தலைமை ஆயர் எம்மானுவேல், ஆயர் இயோசிஃப் மற்றும் புவனஸ் அயிரேஸ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தலைமை ஆயர் ஆகியோருடன் வருகை தந்த பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்தினார்.

ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் திருநாளன்று, கான்ஸ்டான்டினோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகள் வத்திக்கானுக்கு வருகை தருவதும், நவம்பர் 30, திருத்தூதரான அந்திரேயா திருநாளன்று, உரோம் கத்தோலிக்க திருஅவையின் பிரதிநிதிகள் கான்ஸ்டான்டினோபிள் செல்வதும் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்துவரும் மரபு.

28 June 2021, 14:59