தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

தன் குழந்தைகளை நெருங்கி வரும் இறைத்தந்தை

திருத்தந்தை : இறைவனின் அன்பு என்பது, நெருக்கம், இரக்கம், மற்றும் கனிவால் நிரம்பி வழிகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரே பாலின நாட்டமுடையோர், மற்றும் திருநங்கைகளிடையே மறைப்பணி ஆற்றிவரும் இயேசு சபை அருள்பணியாளர் ஜேம்ஸ் மார்ட்டின் அவர்களுக்கு, தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி, அனைவருக்கும் நெருக்கமாக இருந்த இயேசுவின் செயலை பின்பற்றுவதாக அவரது பணி அமைந்துள்ளது என பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரே பாலின நாட்டமுடையோர், மற்றும் திருநங்கைகளுக்குரிய மறைப்பணி கருத்தரங்கையொட்டி, அருள்பணி மார்ட்டின் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் கடிதம், இத்தகைய மக்களுடன் நெருக்கமாக இருந்து பணிபுரியும் அவரின் ஆர்வத்திற்கும் திறனாற்றலுக்கும் நன்றியுரைப்பதாகத் தெரிவிக்கிறது.

தன் குழந்தைகள் ஒவ்வொருவரின் அருகிலும் அன்புடன் இறைத்தந்தை நெருங்கி வருகிறார், ஏனெனில் இறைவனின் அன்பு என்பது, நெருக்கம், இரக்கம், மற்றும் கனிவால் நிரம்பி வழிகின்றது என, திருத்தந்தை தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் தந்தையாக இருக்கும் இறைவனின் இந்த அன்பையே பின்பற்றி, அனைவருக்கும் பணியாளராக இயேசு சபை அருள்பணி மார்ட்டின் அவர்கள் செயல்படுவதாக உரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே கருணையுடனும் நெருக்கத்துடனும், கனிவுடனும் தன் பணிகளை அவர் ஆற்றுவது தொடரவேண்டும் என ஆவல்கொள்வதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

அருள்பணி மார்ட்டின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறைமக்களை அன்பு கூர்ந்து, பாதுகாத்து, அவர்கள் இறையன்பில் வளர உதவவேண்டும் என, தான் தொடர்ந்து செபிப்பதாகவும், அக்கடிதத்தில் உறுதி வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

28 June 2021, 15:19