தேடுதல்

Vatican News
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2020 முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2020 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஓர் ஆழ்நிலை தியானத்துறவி

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வின் 70ம் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டல் நிறைந்த அவரது வாழ்வுக்காக, இறைவனுக்கு நன்றி கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவைக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்துவரும் ஓர் ஆழ்நிலை தியானத்துறவி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 29, இச்செவ்வாயன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் திருநாளன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வின் 70ம் ஆண்டை நிறைவு செய்ததை, தன் மூவேளை செப உரையில் நினைவுகூர்ந்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டல் நிறைந்த அவரது வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறினார்.

வத்திக்கான் தோட்டத்தில், ஆழ்நிலை துறவு இல்லம் ஒன்றில் முன்னாள் திருத்தந்தை தங்கியிருப்பதையும், அங்கிருந்தபடி, உரோம் மறைமாவட்டத்திற்காகவும், உலகத் திருஅவைக்காகவும் செபித்து வருகிறார் என்றும் கூறிய திருத்தந்தை, ஒரு தந்தையாக, உடன்பிறந்தோராக இருக்கும் பெனடிக்ட் அவர்களே, நீங்கள் வழங்கிவரும் நம்பிக்கைக்குரிய சாட்சியத்திற்கு நன்றி, இறைவனை நோக்கி எப்போதும் உயர்ந்திருக்கும் உங்கள் பார்வைக்காக நன்றி என்று கூறினார்.

1951ம் ஆண்டு, ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் பெருவிழாவன்று, ஜெர்மனியின் Freising பேராலயத்தில், 24 வயது நிறைந்த ஜோசப் இராட்சிங்கர் (Joseph Ratzinger) அவர்களும், அவரது மூத்த சகோதரரான கியோர்க் இராட்சிங்கர் (Georg Ratzinger) அவர்களும், அருள்பணியாளர்களாக திருப்பொழிவு பெற்றனர்.

மேலும், ஜூலை 1, இவ்வியாழனன்று, லெபனான் நாட்டிற்காக சிறப்பான இறைவேண்டல் நாள் வத்திக்கானில் நடைபெறவிருப்பதை குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்காக இறைவன் வகுத்துள்ள திட்டங்களை உணர்வதற்கு, தன்னையும், இந்த இறைவேண்டலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தூய ஆவியார் வழிநடத்துமாறு செபிக்க மக்களிடம் விண்ணப்பித்தார்.

அத்துடன், ஜூலை 1, இவ்வியாழனன்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano தன் 160வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறது என்பதையும், தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஊடக நிறுவனத்தில் பணியாற்றுவோர் அனைவருக்கும் தன் நன்றியைக் கூறியதோடு, அவர்கள், உறுதியுடன் தொடர்ந்து பணியாற்ற, தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் வழங்குவதாகக் கூறினார்.

30 June 2021, 15:57