தேடுதல்

புதன் மறைக்கல்வி உரையின்போது இறைவேண்டல் புரியும் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரையின்போது இறைவேண்டல் புரியும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவேண்டல் மறைக்கல்வி தொடரின் நிறைவு

இறைவேண்டலை மையப்படுத்தி, 38 வாரங்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகளின் தொடர், ஜூன் 16, இப்புதனன்று நிறைவுக்கு வந்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டலை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகளின் தொடர், ஜூன் 16, இப்புதனன்று நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி புதனன்று, 'இறைவேண்டலின் மறையுண்மை' என்ற தலைப்பில் திருத்தந்தை புதிதாகத் துவக்கிய மறைக்கல்வி தொடர் உரைகள், இவ்வாண்டு ஜூன் 16 புதனன்று, ‘இயேசுவின் வாழ்வில் இடம்பெற்ற இறைவேண்டல்’ என்ற தலைப்புடன் நிறைவுக்கு வந்தது.

இறைவேண்டலை மையப்படுத்தி, இதுவரை திருத்தந்தை வழங்கிய 38 உரைகளில், ஆபிரகாம், யாக்கோபு, மோசே, தாவீது, இறைவாக்கினர் எலியா ஆகியோர் மேற்கொண்ட இறைவேண்டல்களைக் குறித்தும், திருப்பாடல் நூலில் காணப்படும் இறைவேண்டல்களைக் குறித்தும் திருத்தந்தை தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், இயேசு, மரியா, புனிதர்கள் ஆகியோர் எவ்வாறு இறைவேண்டலின் மக்களாக வாழ்ந்தனர் என்பதைக் குறித்து பல உரைகளில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துவக்ககால திருஅவையை, இறைவேண்டல், எவ்வாறு வழிநடத்தியது என்பதைக் குறித்தும், தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

இறைவனைப் புகழும் செபம், ஆசீரளிக்கும் செபம், கேள்விகள் எழுப்பும் செபம், பரிந்துரை செபம், நன்றியறிதல் செபம் என்று பல்வேறு நோக்கங்களுக்காக நாம் மேற்கொள்ளும் இறைவேண்டல்களைக் குறித்து மறைக்கல்வி உரைகளை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

இறைவேண்டலின் பல்வேறு வடிவங்களான மௌன செபம், சொற்களுடன் கூடிய செபம், தியானித்தல், ஆழ்நிலை பரவச தியானத்தில் மூழ்குதல், ஆகியவற்றைக் குறித்தும், இறைவேண்டலின் போராட்டங்கள், கவனச் சிதறல்கள், மனதின் வறட்சி ஆகிய மனித அனுபவங்களையும் மையப்படுத்தி, திருத்தந்தையின் உரைகள் வழங்கப்பட்டன.

"இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" (மாற்கு 10:47) என்று, பார்வைத்திறனற்ற பர்த்திமேயு எழுப்பிய இறைவேண்டலை மையப்படுத்தி, 2020ம் ஆண்டு, மே மாதம் தன் மறைக்கல்வித் தொடரைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று உரத்த குரலில் கூறி உயிர் துறந்த (லூக்கா 23:46) இயேசுவின் இறைவேண்டலுடன் இத்தொடரை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2021, 14:58