தேடுதல்

தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு, விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு, விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

தனக்காக இறைவேண்டல் செய்ய திருத்தந்தை அழைப்பு

செக் குடியரசில் கடும்புயலால் உயிரிழந்துள்ளோர், காயமடைந்தோர், மற்றும் வீடுகளை இழந்தோருக்காக திருத்தந்தையின் சிறப்பு இறைவேண்டல் உறுதி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 29, இச்செவ்வாய்க்கிழமை, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவைச் சிறப்பிக்க நம்மைத் தயாரித்துவரும் வேளையில், புனித பேதுருவின் வழிவந்த உரோமை ஆயரான தனக்காக, அதாவது, திருத்தந்தைக்காக, சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்யுமாறு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனக்காக சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்யுமாறு, விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தைக்கு விசுவாசிகளின் செபங்கள் தேவைப்படுகின்றன, அவர்கள் தனக்காக செபிப்பார்கள் என்பதும் தனக்குத் தெரியும் என எடுத்துரைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள ஏழை திருஅவைகளுக்கு உதவும் நோக்கத்தில் திருத்தந்தை மேற்கொள்ளும் பணிகளுக்கென, 'புனித பேதுரு காசு' என்ற நிதிக்கு, இந்நாட்களில் காணிக்கைத் திரட்டல் இடம்பெறும் வேளையில், சிறப்புச் செபத்திற்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

மேலும், செக் குடியரசின் தென்கிழக்கிலுள்ள பல கிராமங்கள் கடும்புயலால் பாதிக்கப்பட்டுள்ளதுபற்றி தன் ஆழந்த கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புயலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளோர், காயமடைந்தோர், மற்றும் வீடுகளை இழந்தோருக்காக தான் இறைவேண்டல் செய்வதாகவும், தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 24, வியாழன் இரவு, செக் குடியரசில் இடம்பெற்ற பெரும் புயலால், 5 பேர் உயிரிழந்தனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மற்றும் பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

28 June 2021, 15:12