தேடுதல்

Vatican News
திருத்தந்தையிடம் ஆசிபெறும் ஐ.நா. நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தூதர் Michael Haddad திருத்தந்தையிடம் ஆசிபெறும் ஐ.நா. நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தூதர் Michael Haddad 

திருத்தந்தையிடம் ஆசிபெற்ற ஐ.நா. நிறுவன சுற்றுச்சூழல் தூதர்

முடக்குவாத நோயினால் துன்புற்றுவரும் இளைஞர், Michael Haddad, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பெற்ற ஆசீரின் உதவியோடு, வடதுருவத்தில் 100 கி.மீ. நடைப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

முடக்குவாத நோயினால் துன்புற்றுவரும் லெபனான் நாட்டு இளைஞர், Michael Haddad அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பெற்ற ஆசீரின் உதவியோடு, வடதுருவத்தில் 100 கி.மீ. நடைப்பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார்.

ஆறு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால், தன் இடுப்புக்குக் கீழ் உணர்வுகளை இழந்துவிட்ட Michael Haddad அவர்கள், ஜூன் 2, இப்புதனன்று, திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொண்டதோடு, அந்த உரைக்குப்பின் அவரைச் சந்தித்து, ஆசிபெற்ற வாய்ப்பைக்குறித்து, வத்திக்கான் செய்தியிடம் பகிர்ந்துகொண்டார்.

2016ம் ஆண்டு முதல், ஐ.நா. நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தூதராகப் பணியாற்றிவரும் 40 வயதான Michael Haddad அவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் வடதுருவத்தில் மேற்கொள்ளவிருக்கும் 100 கி.மீ. நடைப்பயணத்திற்கு தன் ஆசீரை வழங்கியதோடு, வடதுருவத்தில் அவர் இருக்கும்போது, தனக்காக செபிக்கும்படியும் கூறினார் என்பதை தன் பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த வட துருவ நடைப்பயணம், இந்த பெருந்தொற்றின் காரணமாக 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்ட Michael Haddad அவர்கள், தான் வடதுருவத்தில் மேற்கொள்ளும் இந்த முயற்சியின்போது, திருத்தந்தையும் தன்னுடன் ஆன்மீக முறையில் உடன் இருப்பார் என்ற உணர்வு, தனக்கு பெரும் சக்தியை அளிப்பதாகக் கூறினார்.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் முற்றிலும் அழிவுற்ற ஒரு மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்ப, Michael Haddad அவர்கள், இரு மாரத்தான் ஓட்டங்களை மேற்கொண்டு, நிதி திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயேசு கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டவர் தான் என்பதை தெளிவாகக் கூறியுள்ள Michael Haddad அவர்கள், தான் ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல தடைகள், இன்னல்கள் அனைத்திலும் கிறிஸ்துவே தனக்கு சக்தியளிக்கிறார் என்று கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் சீரழிவால் இவ்வுலகம் தற்போது ஒரு சக்கரநாற்காலியில் முடக்கப்பட்டுள்ளதை உணர்ந்தபோது, தான் எழுந்து நடக்க தீர்மானித்ததாகவும், தற்போது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், Michael Haddad அவர்கள், வத்திக்கான் செய்தியிடம் கூறினார்.

03 June 2021, 14:39