தேடுதல்

முதியோரின் இறைவேண்டல்கள், உலகைப் பாதுகாக்க முடியும்

முதியோரின் தனிமைக்கு ஆறுதலாக, கடவுள் வானதூதர்களை அனுப்புகிறார். அவர்கள் தங்கள் அடிப்படை வேர்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்பு  தாத்தாக்களே, பாட்டிகளே, அன்பு வயதுமுதிர்ந்த நண்பர்களே, அகில உலகத் திருஅவை, உங்களுக்கு, நமக்கு, நெருக்கமாக இருக்கின்றது, உங்கள் மீது அக்கறை காட்டுகிறது, அன்புகூர்கிறது, மற்றும், உங்களைத் தனித்துவிட விரும்பவில்லை என்று, உங்களைப் போன்ற, உரோமை ஆயராகிய நான் கூற விழைகிறேன் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 22, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

“எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (காண்க.மத். 28,20) என்ற தலைப்பில், இவ்வாண்டு, ஜூலை 25ம் தேதி, திருஅவையில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் உலக நாளுக்கென, தான் எழுதியுள்ள செய்தியில், இவ்வாறு உறுதி கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் இச்செய்தி, ஜூன் 22, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

வானதூதர்கள் சந்திப்பு

எதிர்பாராத மற்றும், கடுங்கோபம்கொண்ட புயல்போன்று நம்மைத் தாக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இச்செய்தி வெளியிடப்படுகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, இருள்படர்ந்த நேரங்களிலும்கூட, ஆண்டவர் வானதூதர்களைத் தொடர்ந்து அனுப்பி, நம் தனிமையில் ஆறுதலளிக்கிறார், மற்றும், “எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்பதை நினைவுபடுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தாத்தாக்களும், பாட்டிகளும், வயதுமுதிர்ந்தோரும், குறிப்பாக, மிகவும் தனிமையில் வாடுவோர், வானதூதர் ஒருவரின் சந்திப்பைப் பெறவேண்டுமென்றும்,  பேரப்பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள், நீண்டகால நண்பர்கள், அல்லது, இந்த இன்னலான நேரங்களில் சந்தித்தவர்கள் ஆகியோராக, இந்த வானதூதர்கள் இருக்கவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

பணிக்கு ஓய்வு வயதில்லை

பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதைத்தொட்ட காலக்கட்டத்தில் உரோம் ஆயராகப் பணியை ஏற்றேன், எதுவும் புதிதாக ஆற்றமுடியாது என்று நினைத்தேன், ஆனால் ஆண்டவர் எப்போதும் நமக்கு நெருக்கமாக இருந்து, புதிய வாய்ப்புக்களை, புதிய கருத்தாக்கங்களை, மற்றும், புதிய ஆறுதல்களை வழங்கிக்கொண்டிருக்கிறார், ஆண்டவர் ஒருபோதும் பணிஓய்வில் இருப்பதில்லை என்று, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

வயதான காலத்தில் நம் அழைத்தல் என்ன என்று சிந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, நம் அழைப்பு, நம் அடிப்படை வேர்களைப் பாதுகாக்கவேண்டியது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், எந்த வயதில் இருந்தாலும், தனியாகவோ குடும்பமாகவோ இருந்தாலும், நற்செய்தியை அறிவிக்கவும், அதை அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கவும், ஓய்வு வயதே கிடையாது என்பதை நினைவுபடுத்தினார்.

கனவுகள், நினைவு, இறைவேண்டல்

இப்போதைய பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் நெருக்கடி, நாம் அனைவரும், ஒருவர் ஒருவருக்கு கடமைப்பட்டவர்கள் என்பதை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்விலும், சமுதாய நட்புறவிலும், நாளைய உலகைக் கட்டியெழுப்புவதற்கு, கனவுகள், நினைவு, மற்றும், இறைவேண்டல் ஆகிய மூன்று தூண்கள் ஆதரவளிக்கும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

கனவுகள்

“உங்கள் முதியோர் கனவுகளையும், உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்” (யோவேல் 2,28) என்று இறைவாக்கினர் யோவேல் கூறிய சொற்களை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, உலகின் வருங்காலம், இளையோருக்கும், முதியோருக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையைச் சார்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

இளையோரின்றி, வேறு எவரால், முதியோர்களின் கனவுகளை நிஜமாக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை, முதியோர் தொடர்ந்து கனவு காணவேண்டும் என்றும், நீதி, அமைதி, தோழமை ஆகியவை பற்றிய கனவுகளை இளையோர் இயலக்கூடியதாய் ஆக்குவதற்குத் தேவையான புதிய பார்வையை அவர்கள் வழங்கவேண்டும் என்றும், இவ்வாறு நாம் ஒன்றுசேர்ந்து வருங்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.   

நினைவு

கனவுகள், நினைவோடு பின்னிப்பிணைந்தவை என்றுரைத்துள்ள திருத்தந்தை, போரின் வேதனையான நினைவுகள், இளையோர் அமைதியின் மதிப்பை கற்றுக்கொள்ள உதவுவதாய் இருக்கவேண்டும் எனவும், நினைவு இன்றி, நம்மால் ஒருபோதும் வீட்டைக் கட்ட முடியாது என்றும், வாழ்வின் அடித்தளம் நினைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறைவேண்டல்

முதியோரின் இறைவேண்டல்கள், உலகைப் பாதுகாக்கமுடியும் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் விலைமதிப்பற்ற ஊற்றாகிய, மற்றும், உயிர்மூச்சாகிய இறைவேண்டல், திருஅவைக்கும், உலகத்திற்கும், உடனடியாக மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

அல்ஜீரியாவில் தனிமையில் வாழ்ந்த துறவியாகிய அருளாளர் Charles de Foucauld அவர்களின் வாழ்வை, முதியோருக்கு முன்மாதிரிகையாகக் கூறியதோடு, விரைவில்  புனிதராக அறிவிக்கப்படவுள்ள அவர், நாம் எல்லாரும், ஏழைகள் மற்றும், தேவையில் இருப்போரின் துன்பங்களைப் புரிந்துகொள்ள உதவுவாராக என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

“எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று நம் ஆண்டவர் கூறிய திருச்சொற்களை நாம் அனைவரும், குறிப்பாக இளையோர் அடிக்கடி சொல்வதற்கு கற்றுக்கொள்ளவேண்டும், இச்சொற்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவைக்கின்றன என்றுரைத்து, தன் ஆசீரோடு இச்செய்தியை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

22 June 2021, 15:12