தேடுதல்

Vatican News
ROACO அமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு ROACO அமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு  (Vatican Media)

ROACO அமைப்பின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை

சிரியாவிலிருந்து மக்கள் எழுப்பும் அபயக்குரல் ஆண்டவரின் உள்ளத்தை எட்டினாலும், அவர்களின் குரலை, பொறுப்புள்ள அரசுத்தலைவர்கள் கேட்க மறுப்பதால், அந்நாடு தொடர்ந்து இன்னல்களை அடைந்து வருகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்று இவ்வுலக நிறுவனங்களை பல வழிகளில் முடக்கிவைத்திருந்த வேளையில், லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்திற்குப் பின்னரும், எரித்ரியாவின் நிலைகள் குறித்து அறியவும், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு உதவிகள் செய்துவரும் ROACO அமைப்பு, தன் சந்திப்புக்களை, தொடர்நது நடத்திவந்தது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

ஜூன் 21, இத்திங்கள் முதல், 24, இவ்வியாழன் முடிய, ROACO அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரோம் நகரில் மேற்கொண்ட 94வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, கடந்த ஆண்டு, இந்த நிறையமர்வு கூட்டம் கணணி வழியே நடைபெற்றத்தைக் குறிப்பிட்டு, நேருக்கு நேர் சந்தித்துப் பேசும் அனுபவம் எப்போதுமே சிறந்தது என்று கூறினார்.

ROACO அமைப்பு 2019ம் ஆண்டு நடத்திய கூட்டத்தில், தான் ஈராக் நாட்டிற்குச் செல்ல விழைவதை முதல்முறையாகக் கூறியதை, திருத்தந்தை, இச்சந்திப்பில் சுட்டிக்காட்டி, இறைவனின் உதவியால், தனது விருப்பம், சில மாதங்களுக்கு முன் நிறைவேறியதை மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய பொருளாதார சரிவாலும், ஆலயங்களில் மக்கள் கூடிவருவது குறைந்துபோனதாலும், புனித பூமியின் பணிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் திரட்டப்படும் நிதி, 2020ம் ஆண்டில் பாதியளவே கிடைத்தது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எது முக்கியமானத் தேவைகள் என்பதைச் சிந்திக்க, இந்த நிதி குறைபாடு, நம்மை உந்தித்தள்ளுகிறது என்பதையும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே அண்மையில் திரண்ட போர் மேகங்கள், புனித பூமியின் அவசரத் தேவைகளை நமக்குமுன் வைத்துள்ளன என்று கூறிய திருத்தந்தை, நோவா காலத்தில், அமைதியின் அடையாளமாக, ஆண்டவர், வானவில்லை பதித்த அந்த விண்வெளி, அண்மைய நாள்களில், ஏவுகணைகளால், தீப்பிடித்து எரிந்து, மரணங்களை உருவாக்கியது என்று வருத்தத்துடன் கூறினார்.

சிரியாவிலிருந்து மக்கள் எழுப்பும் அபயக்குரல் ஆண்டவரின் உள்ளத்தை எட்டினாலும், அவர்களின் குரலை, பொறுப்புள்ள அரசுத்தலைவர்கள் கேட்க மறுப்பதால், அந்நாடு தொடர்ந்து இன்னல்களை அடைந்து வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ROACO அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

சிரியாவின் திருப்பீடத்தூதர் கர்தினால் மாரியோ செனாரி (Mario Zenari), மற்றும், லெபனான், ஈராக், எத்தியோப்பியா, அர்மீனியா, ஜியார்ஜியா நாடுகளின் பிரதிநிதிகளும், தற்போது நடைபெற்ற 94வது நிறையமர்வு கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் நாடுகளின் நிலையை நேரடியாகக் கூற வாய்ப்பு பெற்றது மிகச்சிறந்த விடயம் என்று, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உரோம் நகரின் Bonus Pastor, அதாவது, நல்லாயன் இல்லத்தில் ஜூன் 21, திங்கள் முதல், 24, இவ்வியாழன் முடிய நடைபெற்ற ROACO அமைப்பின் 94வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில், புனித பூமி, எத்தியோப்பியா, ஆர்மீனியா, ஜியார்ஜியா, மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் திருஅவைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

24 June 2021, 12:36