தேடுதல்

பாத்திமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் பாத்திமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பாத்திமா அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தையர்

1981ம் ஆண்டு, மே 13ம் தேதி, பேதுரு வளாகத்தில் குண்டடிப்பட்ட வேளையில், தன்னை, அன்னை மரியா தாங்கிப்பிடித்தார் என்றும், அதைத் தொடர்ந்து, அந்த அன்னை தனக்கு உடல்நலம் வழங்கினார் என்றும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், பல முறை கூறிவந்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

104 ஆண்டுகளுக்கு முன், 1917ம் ஆண்டு, மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டில், பாத்திமா பங்குத்தளத்தைச் சேர்ந்த Cova da Iria என்ற இடத்தில் கன்னி மரியா, 10 வயதான லூசியா (Lucia dos Santos) மற்றும் அவரது உறவினர்களான பிரான்ஸிஸ்கொ, ஜசிந்தா (Francisco and Jacinta Marto) என்ற மூன்று சிறாருக்குத் தோன்றினார்.

இந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்த ஆறு முறை, ஒவ்வொரு மாதமும் 13ம் தேதிகளில் கன்னி மரியா இச்சிறாருக்கு தோன்றினார். 1917ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும், இச்சிறார், அந்நகர மேயரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், இச்சந்திப்பு நிகழவில்லை.

கன்னி மரியா, அக்டோபர் 13ம் தேதி இறுதி முறை தோன்றியபோது, அங்கு கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் காணும்படி, 'சூரியனின் புதுமை' நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து, 1930ம் ஆண்டு, மறைமாவட்டத்தின் ஆயர், அன்னை மரியா அளித்த காட்சி, மக்களின் வணக்கத்திற்குரியது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாத்திமா திருத்தலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது.

1981ம் ஆண்டு, மே 13ம் தேதி, பேதுரு வளாகத்தில் குண்டடிப்பட்ட வேளையில், தன்னை, அன்னை மரியா தாங்கிப்பிடித்தார் என்றும், அதைத் தொடர்ந்து, அந்த அன்னை தனக்கு உடல்நலம் வழங்கினார் என்றும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள்,  பல முறை கூறிவந்துள்ளார்.

பாத்திமாவில் திருத்தந்தை 2ம் யோவான் பவுல்
பாத்திமாவில் திருத்தந்தை 2ம் யோவான் பவுல்

தான் துப்பாக்கியால் தாக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டு திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் பாத்திமா திருத்தலத்திற்கு, மே 12, 13 ஆகிய நாள்கள் சென்று, அன்னைக்கு தன் வணக்கத்தையும் நன்றியையும் வெளியிட்டார்.

இதற்குப்பின், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1991ம் ஆண்டு மீண்டும் அத்திருத்தலத்திற்கு ஒருமுறை சென்றதோடு, 2000மாம் ஆண்டு, பாத்திமா திருத்தலத்தில், பிரான்ஸிஸ்கொ, ஜசிந்தா ஆகிய இருவரையும் அருளாளர்களாக உயர்த்தினார்.

இந்நிகழ்வின் பத்தாம் ஆண்டு நினைவைச் சிறப்பிக்க, முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்கு, 2010ம் ஆண்டு, மே 13ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

பாத்திமாவில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
பாத்திமாவில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

அன்னை மரியா பாத்திமாவில் காட்சியளித்த நிகழ்வின் 100ம் ஆண்டு நிறைவடைந்த 2017ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தலம் சென்று, அங்கு, அருளாளர்கள் பிரான்ஸிஸ்கொ, ஜசிந்தா ஆகிய இருவரையும் புனிதர்களாக உயர்த்தினார்.

பாத்திமாவில் திருத்தந்தை புனித 6ம் பவுல்
பாத்திமாவில் திருத்தந்தை புனித 6ம் பவுல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2021, 15:04