தேடுதல்

Vatican News
அர்ஜென்டீனா குடியரசுத்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அர்ஜென்டீனா குடியரசுத்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

அர்ஜென்டீனா அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

“நமது வாழ்வும், உலகின் வரலாறும் இறைவனின் கரங்களில் உள்ளன. திருஅவையையும், நம்மையும், இவ்வுலகம் அனைத்தையும், மரியாவின் மாசற்ற இதயத்திடம் ஒப்படைப்போம்” - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா குடியரசுத்தலைவர் அல்பெர்த்தோ பெர்னான்டஸ் (Alberto Fernández) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மே 13, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

அரசுத்தலைவர் பெர்னான்டஸ் அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அர்ஜென்டீனா குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள், குறிப்பாக, இந்த பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையில், அரசும், தலத்திருஅவையும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஆகியவை குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, வத்திக்கான செய்தித்துறை கூறியது.

மேலும், மே 13, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட ஆண்டவரின் விண்ணேற்றத் திருவிழாவையும், இதே 13ம் தேதியன்று, உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட பாத்திமா அன்னை மரியா திருநாளையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார்.

"ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா, இவ்வுலக விடயங்களைத் தாண்டி, நம் பார்வையை மேல்நோக்கி எழுப்புகிறது. அதே வேளையில், ஆண்டவர் இவ்வுலகில் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணியையும் அது நினைவுறுத்துகிறது. நாம் மேற்கொள்ளவேண்டிய போரில், தூய ஆவியார், நம்மை வழிநடத்துவாராக" என்ற சொற்களை, திருத்தந்தை தன் முதல் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

'பாத்திமாவின் நமது அன்னை' (#OurLadyofFatima) என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "நமது வாழ்வும், உலகின் வரலாறும் இறைவனின் கரங்களில் உள்ளன. திருஅவையையும், நம்மையும், இவ்வுலகம் அனைத்தையும், மரியாவின் மாசற்ற இதயத்திடம் ஒப்படைப்போம். அமைதிக்காக, பெருந்தொற்றின் முடிவுக்காக, பாவங்களுக்காக வருந்தும் மனதிற்காக, நமது மனமாற்றத்திற்காக இறைவேண்டல் புரிவோமாக" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

13 May 2021, 15:00