தேடுதல்

Vatican News
மியான்மார் மியான்மார்   (AFP or licensors)

மியான்மாரில் அமைதி, ஒப்புரவுக்காக, திருத்தந்தை திருப்பலி

அப்பாவி மக்களுக்கு எதிராக, பல வாரங்களாக வன்முறை இடம்பெற்றுவரும் மியான்மாருக்கு, உறுதியான நீதி, அமைதி, மற்றும், ஒப்புரவு செய்திகள் தேவைப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து, தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகளால், அப்பாவி மக்கள் பெரிதும் துன்புற்றுவரும்வேளை, அந்நாட்டில் அமைதியும், ஒப்புரவும் நிலவுவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 16, இஞ்ஞாயிறன்று, இத்தாலியில் வாழ்கின்ற மியான்மார் மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி செபிக்கின்றார்.

இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் வாழ்கின்ற மியான்மார் மக்களுக்கு நிறைவேற்றும் திருப்பலி குறித்து, பீதேஸ் செய்தியிடம் பேசிய, மறைபரப்பு சபையைச் சார்ந்த, மியான்மார் அருள்பணி Maurice Moe Aung அவர்கள், அப்பாவி மக்களுக்கு எதிராக, பல வாரங்களாக வன்முறைகள் இடம்பெற்றுவரும் மியான்மாருக்கு, நீதி, அமைதி, மற்றும், ஒப்புரவு ஆகியவைகொண்ட உறுதியான செய்தி தேவைப்படுகின்றது என்று கூறினார்.

திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில், மியான்மார் மக்களாகிய நாங்களும் இணைந்து செபிப்பது, ஓர் உறுதியான ஆன்மீக ஒன்றிப்பின் அடையாளமாக உள்ளது என்றும், எம் நாட்டினர், நம்பிக்கையோடும், மகிழ்வோடும் வருங்காலத்திற்குத் திரும்புவதற்கு, இறைவனையும், அன்னை மரியாவையும் மன்றாட உள்ளோம் என்றும், அருள்பணி Moe Aung அவர்கள் கூறினார்.

இத்திருப்பலியில் இத்தாலியில் வாழ்கின்ற மியான்மார் நாட்டு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலை விசுவாசிகள், மற்றும், ஏனைய மதங்களைச் சார்ந்த மியான்மார் நாட்டு குடிமக்களும் கலந்துகொள்வார்கள் என்றும், அருள்பணி Maurice Moe Aung அவர்கள் அறிவித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதி மியான்மார் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை எதிர்த்து இடம்பெற்றுவரும் பொதுமக்களின் அமைதியான போராட்டத்தின்மீது, இராணுவம் மேற்கொண்டுவரும் வன்முறைகளால், இதுவரை, 780க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர், மற்றும், 3,800க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர்.

15 May 2021, 15:50