தேடுதல்

Vatican News
பாத்திமா அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட புனித ஜெசிந்தா மற்றும் புனித பிரான்சிஸ்கோ பாத்திமா அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட புனித ஜெசிந்தா மற்றும் புனித பிரான்சிஸ்கோ  

புனிதம் நோக்கிய பாதையில் இயல்பு நிலையோடு செயல்படுங்கள்

ஒவ்வொரு பீடச்சிறாரும் தன் கரங்களை, எண்ணங்களை, தன் நேரத்தை இயேசுவுக்காக அர்ப்பணிக்கும்போது, அவர் நமக்கு நிச்சயம் வெகுமதி அளிப்பார், உண்மையான மகிழ்வை நமக்கு வழங்குவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

போர்த்துக்கல் நாட்டின் பீடச்சிறார் இணைந்து, பாத்திமா அன்னை திருத்தலத்திற்கென, தங்கள் 25ம் ஆண்டு தேசியத் திருப்பயணத்தை இணையம் வழி ஒன்றிணைந்து நடத்துவத்தையொட்டி, அவர்களுக்கு காணொளி வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்த்துக்கல் நாட்டு ஆயர்களின் திருவழிபாடு மற்றும் ஆன்மீக அவையின் தலைவர், ஆயர் ஹோசே மானுவேல் கார்சியா கொர்தேய்ரோ அவர்கள் வழியாக திருத்தந்தை இந்த பீடச்சிறார்க்கு அனுப்பியுள்ள காணொளிச்செய்தி, திருவழிபாடுகளில் உதவி புரியும் இச்சிறார், திருப்பலியில், உடலாகவும் இரத்தமாகவும் மாறும் இயேசுவை நேரடியாக கண்கொண்டு காண முடியவில்லையெனினும், அவர்களின் இதயங்களும் உதடுகளும் அவரை போற்றி ஆராதிக்கின்றன என அச்செய்தியில் கூறியுள்ளார்.

திருப்பலியில் பீடச்சிறார் பங்கேற்கும்போது, அவர்களின் உள்மன ஆழ்ந்த தியானம், மற்றும் மதிப்பினால் தூண்டப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகள், அங்குள்ள கிறிஸ்தவ சமுதாயத்திற்கு விசுவாச அறிக்கையாக செயல்படும் எனவும் தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு பீடச்சிறாரும் தன் கரங்களை, எண்ணங்களை, தன் நேரத்தை இயேசுவுக்கென அர்ப்பணிக்கும்போது, அவர் நமக்கு நிச்சயம் வெகுமதி அளிப்பார், உண்மையான மகிழ்வை நமக்கு வழங்குவார் என அதில் திருத்தந்தை கூறியுள்ளார்.

தங்கள் பாதுகாவலரான, பாத்திமா நகரின் சிறுவன், புனித பிரான்சிஸ்கோ மார்த்தோ அவர்களையும், தங்கள் வாழ்வில் திருநற்கருணையால் ஊட்டம்பெற்ற புனிதர்களையும், வழிகாட்டிகளாக கொண்டு செயல்படும் போர்த்துக்கல் பீடச்சிறார், புனித வாழ்வையும், இயல்புநிலையையும் கொண்டவர்களாகச் செயல்படவேண்டுமென இயேசு எதிர்பார்க்கிறார் என இக்காணொயில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல், புனிதத்துவத்தை நோக்கியப் பாதையில் இயல்பு நிலையோடு செயல்படவேண்டும் என பீடச்சிறாருக்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனிடமிருந்து பெறும் ஒளியையும், நம்பிக்கையையும், பிறருக்கும் வழங்குங்கள், என்ற விண்ணப்பத்துடன், தன் செய்தியை நிறைவுச் செய்துள்ளார்.

03 May 2021, 15:06