தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக தியானம் குறித்த சுரங்கம்

நற்செய்தியின் எடுத்துக்காட்டுக்களைப் பின்பற்றி நாம் மேற்கொள்ளும் உள்மன தியான முறை, நம் ஆன்மீக வாழ்வுடன் தொடர்புடையவற்றில் இறைவிருப்பத்தை கண்டுகொள்ள உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'இறை விருப்பத்தை தேடுதலும் கண்டுகொள்ளுதலும்' என்ற தலைப்பில் இயேசு சபை அருள்பணி Miguel Ángel Fiorito அவர்கள் எழுதியுள்ள நூல், ஆன்மீக ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவோருக்கு மிகச்சிறந்த வழிகாட்டி என, அந்நூலின் அணிந்துரையில் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நூல் குறித்து காணொளிச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக உள்மன தியானம் குறித்த சுரங்கமாக இந்த புத்தகம் உள்ளது என தன் காணொளிச் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உதவி' என்பதே, இந்நூலின் திறவுகோல் சொல்லாக உள்ளது என கூறியுள்ளார்.

ஆழ்நிலை தியானத்தில், தன்னால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் உதவமுடியும் என Fiorito அவர்கள், தன் நூலின் துவக்க உரையில் கூறியுள்ளது, அடுத்தவர் மீது நம்பிக்கைக் கொண்டு, அவரது சுதந்திரத்தை எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது எனவும், ஆன்மீக உதவி என்பது, விடுதலைக்கான உதவி என்பதையும் தன் காணொளிச் செய்தியில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை.

இயேசு சபை ஆன்மீகவாதி, அருள்பணி Fiorito அவர்களின் நூல், புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக சிந்தனைகளை தொகுத்து, எளிய முறையில், சிறு சிறு வழிகாட்டு அட்டைகளாக மாற்றி, ஆழ்மன தியானத்திற்கு பெரிய அளவில் உதவுவதாக இருக்கின்றது, என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

எந்த ஆன்மீக உணர்வோடு இந்நூல் எழுதப்பட்டதோ, அதே உணர்வுடன் இந்நூலை தியான வாழ்வில் பயன்படுத்தவேண்டும் என ஊக்கமளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரின் வாழ்வை சீரமைப்பதன் வழியாக, இறைவனின் விருப்பத்தைக் கண்டுகொள்ள, இந்நூல் உதவுகிறது என, தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

புனித பேதுரு, கடவுள் முன் தன்னை பாவியென்று அறிக்கையிட்டபோதெல்லாம், தன்னை பின்பற்றும்படி இயேசு விடுத்த அழைப்பை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவரை குறைபாடற்றவராக மாற்ற இயேசு அளித்த அந்த வாய்ப்பைப்போல், ஒவ்வொருவருக்கும் அது வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.

நற்செய்தியின் எடுத்துக்காட்டுக்களைப் பின்பற்றி நாம் மேற்கொள்ளும் உள்மன தியான முறை, நம் ஆன்மீக வாழ்வுடன் தொடர்புடையவற்றில் இறைவிருப்பத்தை கண்டுகொள்ள உதவுகிறது என்பதை அருள்பணி Fiorito அவர்கள் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளார் என கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆன்மீக ஆழ்மன தியானம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, இந்நூல் நல்ல உதவியாக இருக்கும் என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

10 May 2021, 15:31