தேடுதல்

வத்திக்கான் வானொலிக்கு வந்த திருத்தந்தையிடம் ஆசி பெறும் அருள்சகோதரி திரேசா வத்திக்கான் வானொலிக்கு வந்த திருத்தந்தையிடம் ஆசி பெறும் அருள்சகோதரி திரேசா   (Vatican Media)

வத்திக்கான் வானொலி நிலையத்தில் திருத்தந்தை

செயல்பாட்டுவாதத்திற்கு அல்ல, மாறாக, செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, துணிச்சலுடனும் சுதந்திரத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

செயல்பாடுடையதே ஆக்கமுடையதாக இருக்கும், ஆனால் செயல்பாட்டுவாதத்தால் முடக்கப்பட்டு முன்னோக்கிச் செல்லமுடியாமல் இருப்பவை யாவும் மரணத்தையே தழுவும் என்பதால், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையில் பணிபுரிவோர் அனைவரும், துணிச்சலுடன், போதிய சுதந்திரத்துடன், செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2013ம் ஆண்டு, திருஅவையை வழிநடத்த தேர்ந்துகொள்ளப்பட்டபின், முதன்முறையாக வத்திக்கான் வானொலியைப் பார்வையிடவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள பணியாளர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்கி, அவர்களுக்கென்று உரையும் வழங்கியவேளையில் இந்த அழைப்பை விடுத்தார்.

தான் வாழ்ந்த அர்ஜென்டினா நாட்டில், ஒரு மந்திரியோ, உயர் அதிகாரியோ புதிதாக பதவியேற்குமுன்னர், முதலில் தன் அலுவலகத்தை மாற்றியமைப்பதிலும் அழகுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவேளைகளில் நாம், செயல்பாடுகளைவிட, செயல்பாட்டுவாதத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம், என்றார்.

அலுவலகங்களில் நல்லதைச் செய்வதற்கான காலதாமதங்கள், செயல்பாட்டுவாதத்தால் பிறக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செயல்பாட்டுவாதத்திற்கு அல்ல, மாறாக, செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, துணிச்சலுடனும் சுதந்திரத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள், என வத்திக்கான் தகவல் தொடர்பாளர்களிடம் எடுத்துரைத்தார்.

திருப்பீடத் தகவல்தொடர்பு அவையில் பணிபுரிவோரை சந்தித்ததில் தான் மகிழ்ச்சியடைவதாக உரைத்த திருத்தந்தை, நாம் ஆற்றும் சேவை அதன் இலக்கை சென்றடைகிறதா என்பது குறித்து நாம் அடிக்கடி சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வத்திக்கான் வானொலியை எத்தனை பேர் கேட்கின்றார்கள், லொசெர்வாத்தோரே ரொமானோ திருப்பீட இதழை எத்தனைபேர் வாசிக்கின்றார்கள் என்பது குறித்து கேள்வி நம்மில் எழவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல பணிகள் அது சேரவேண்டிய இடத்தைச் சென்றடையவில்லை எனில், அதனால் எவ்வித பயனுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

வத்திக்கான் வானொலியின் தினசரி ஒலிபரப்புகளை உலகிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் எடுத்து மறுஒலிபரப்புச் செய்கின்றன, அல்லது, தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றன என்பது திருத்தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதுடன், வத்திக்கான் செய்திகள் அதிக மக்களைச் சென்றடைய ஆய்வுகளும், ஆக்கப்பணிகளும் செய்யப்படும் என்பது குறித்த உறுதிமொழியும் இந்த சந்திப்பின்போது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களால் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது.

மே 24, திங்கள் காலையில், வத்திக்கான் வானொலி, மற்றும் லொசெர்வாத்தோரே ரொமானோ இதழ், பணியாளர்களுடன் வானொலி நிலையத்தில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் செலவிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

24 May 2021, 14:59