தேடுதல்

“Ambrosoli” தொழில்கல்வி நிலையத்தினர் சந்திப்பு “Ambrosoli” தொழில்கல்வி நிலையத்தினர் சந்திப்பு  (ANSA)

“Ambrosoli” தொழில்கல்வி நிலையத்தினர் சந்திப்பு

தொழில் கல்வியில், அறிவு, மனம், கரங்கள் ஆகிய மூன்று அம்சங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதிப்போடும், மிகப் பயனுள்ள முறையிலும், திறந்த மனத்தோடும், உறவுகளைக் கட்டியெழுப்ப உதவுகின்ற இடமாகவும், பொறுப்புள்ள குடிமக்களாக மாறவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்குகின்ற இடமாகவும் அமைந்துள்ள, கல்வி நிலையத்திற்காக, மாணவர்கள் கடவுளுக்கு நன்றிகூர வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மே 22, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் தன்னை சந்திக்கக் காத்திருந்த, இத்தாலியின் “Ambrosoli” தொழில்கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மற்றும், மாணவர்கள் 55 பேருக்கு உரையாற்றிய திருத்தந்தை, கல்வியாண்டை முடித்துச் செல்லும் இப்பள்ளி மாணவர்கள், தாங்கள், அறிவிலும், மனத்திலும், தொழில் பயிற்சியிலும் வளர உதவிய கல்விநிலையத்திற்கு எப்போதும் நன்றியோடு இருக்குமாறு கூறினார்.

இப்பெருந்தொற்று காலத்தில், தங்களுக்குக் கிடைத்த நேர்முக அனுபவங்களை பல்வேறு ஆசிரியர், மற்றும், மாணவர் குழுக்கள் தனக்கு எழுதியிருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஆசிரியர்களின் படைப்பாற்றல்திறன், மாணவர்களின் கனவுகளுக்குப் பதிலளிப்பதாய் உள்ளது என்று குறிப்பிட்டார். 

உலக அளவில், கடந்த பல மாதங்களாக, வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்துள்ளவேளை, “Ambrosoli” தொழில்கல்வி நிலையம், நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்றும், இக்கல்வி நிலையம், கற்றலுக்கும், வேலைசெய்வதற்கும் இடையேயுள்ள தொடர்பை கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, ஆசை, அன்பு, ஏக்கம், ஆகியவற்றின் பிறப்பிடமான இதயத்தின் முக்கியத்துவமும் இப்பயிற்சியில், இடம்பெறவேண்டும் என்று கூறினார்.

எனவே தொழில்கல்வியில், அறிவு, மனம், கரங்கள் ஆகிய மூன்று அம்சங்கள் ஒன்றோடொன்று தொடர்பாக உள்ளன என்றுரைத்த திருத்தந்தை, இன்றைய டிஜிட்டல் உலகின் மாணவர்கள், தங்களுக்குள்ளே முடங்கிப்போகும் ஆபத்தும் உள்ளது, அதிலிருந்து அவர்கள் வெளியேறி, எதார்த்தத்தைப் பார்க்கக்கூடியவர்களாக மாறவும், தொழில் கல்வி உதவவேண்டும் என்று கூறினார்.

இச்சந்திப்பின் இறுதியில், “Ambrosoli” தொழில்கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மற்றும், மாணவர்களை ஆசிர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

22 May 2021, 15:50