தேடுதல்

Vatican News
Laudato Sí வாரம் Laudato Sí வாரம் 

உண்மையைத் தேடும் கலந்துரையாடலுக்கு விடாமுயற்சி அவசியம்

2002ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சாரப் பன்மைத்தன்மை உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் மே 21ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 21, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, கலாச்சாரப் பன்மைத்தன்மை, கலந்துரையாடல், மற்றும், வளர்ச்சி உலக நாளை மையப்படுத்தியும், திருஅவையில் மே 16, கடந்த ஞாயிறன்று துவங்கிய Laudato Sí வாரத்தையொட்டியும், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அமைதியான கலந்துரையாடலில், உண்மையைத் தேடலாம். இவ்வாறு செயல்படுவதற்கு, விடாமுயற்சி தேவைப்படுகின்றது. இதற்கு, அமைதியான நேரங்கள் அவசியம். ஆயினும், மக்களின் கலாச்சாரப் பன்மைத்தன்மை, ஏற்கப்படுவதற்கு பொறுமை அவசியம்” என்ற சொற்களை, திருத்தந்தை, தன் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்திருந்தார்.   

அதோடு, திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் Laudato Sí வாரத்தையொட்டி, திருத்தந்தை, இவ்வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “கடவுளின் கைவண்ணத்தின் பாதுகாப்பாளர்கள்” என்ற நம் அழைப்பை வாழ்வது, புண்ணிய வாழ்விற்கு இன்றியமையாத பண்பாகும். இவ்வாறு வாழ்வது, நம் கிறிஸ்தவ அனுபவத்தின் விருப்ப அல்லது, இரண்டாம்தர அம்சமல்ல" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன

Laudato Sí வாரத்தையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஐந்து நாள்களாக, தொடர்ந்து, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

2002ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சாரப் பன்மைத்தன்மை உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் மே 21ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

21 May 2021, 15:20