தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய அவையின் தலைவர் Ursula von der Leyen   திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய அவையின் தலைவர் Ursula von der Leyen   (AFP or licensors)

திருத்தந்தை பிரான்சிஸ், der Leyen சந்திப்பு

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி, உலக பல்லுயிர் நாளை உருவாக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய அவையின் தலைவர் Ursula von der Leyen அவர்கள், மே 22, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

der Leyen அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

திருப்பீடத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே, தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு, இவ்விரு தரப்புகளுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், ஐரோப்பாவில், மனித மற்றும், சமுதாய முன்னேற்றம், கோவிட்-19 பெருந்தொற்று சமுதாயத்தில் உருவாக்கியுள்ள எதிர்விளைவுகள், புலம்பெயர்ந்த மக்களின் நிலை, காலநிலை மாற்றம், மத்தியக்கிழக்குப் பகுதியின் அண்மை நிலவரம் போன்ற தலைப்புக்கள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.

பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலி

மேலும், மே 23, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லுயிர்கள் அழிவுக்கு மனிதரே முக்கிய காரணம் 

கத்தோலிக்கத் திருஅவையில் மே 16, கடந்த ஞாயிறு முதல், மே 25, வருகிற செவ்வாய் வரை சிறப்பிக்கப்பட்டுவரும் Laudato Sí வாரத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆறு நாள்களாக, தொடர்ந்து, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

மே 22, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான தாவரங்கள், மற்றும், விலங்கு உயிரின வகைகள் அழிந்துவருகின்றன, இதற்கு, மனிதரின் நடவடிக்கையே காரணம். இனிமேல் அவை, தங்களின் வாழ்வால் கடவுளை மாட்சிப்படுத்த முடியாது, மற்றும், நமக்கும், தங்களைப்பற்றிய செய்தியை அவற்றால் தரஇயலாது” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

மே 22, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பல்லுயிர் நாளையொட்டி, இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை, பல்லுயிர்கள் காக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைச் சீரழிந்து வருவதிலிருந்து அதனைக் காப்பாற்றும், “தீர்வின் ஓர் அங்கம் நாம்” என்ற தலைப்பில், இச்சனிக்கிழமையன்று, உலக பல்லுயிர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உலக நாளை, இரண்டாயிரமாம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை உருவாக்கியது.  

22 May 2021, 15:54