தேடுதல்

மறைக்கல்வி உரை வேளையில் திருப்பயணியுடன் இணைந்து செபிக்கும் திருத்தந்தை மறைக்கல்வி உரை வேளையில் திருப்பயணியுடன் இணைந்து செபிக்கும் திருத்தந்தை 

இறைவேண்டலில் பணிவு அவசியம் – திருத்தந்தை பிரான்சிஸ்

"நாம் இறைவேண்டல் செய்யும் வேளையில், பணிவுடன் இருப்பது அவசியம். அவ்வாறு செபிக்கும்போது, நமது சொற்கள், பயனற்ற சொற்களாக இல்லாமல், உண்மையிலேயே இறைவேண்டல்களாக இருக்கும்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டலின் பல்வேறு பண்புகளை விளக்கிக்கூறும் மறைக்கல்வி உரைகளை, ஒவ்வொரு புதனன்றும் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 26, இப்புதனன்று, இறைவேண்டலுக்குத் தேவையான பணிவைக்குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"நாம் இறைவேண்டல் செய்யும் வேளையில், பணிவுடன் இருப்பது அவசியம். அவ்வாறு செபிக்கும்போது, நமது சொற்கள், கடவுளால் நிராகரிக்கப்படும் பயனற்ற சொற்களாக இல்லாமல், உண்மையிலேயே இறைவேண்டல்களாக இருக்கும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மே 23, கடந்த ஞாயிறன்று தூய ஆவியாரின் வருகைப்பெருவிழா சிறப்பிக்கப்பட்டதை நினைவுறுத்தும் வண்ணம், இப்புதனன்று, தூய ஆவியாரைக் குறித்து தன் 2வது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார் திருத்தந்தை.

"கடவுளின் கொடையாக விளங்கும் தூய ஆவியார், நாம் சுதந்திரம் அடைந்த மனிதர்களாக வாழ உதவி செய்கிறார். அன்பு செய்வதை அறிந்த மக்களாக, வாழ்வே, மறைப்பரப்புப்பணி என்பதை அறிந்த மக்களாக வாழ, தூய ஆவியார் உதவி செய்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், @pontifex என்ற தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

மே 26, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3272 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 1,075 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

26 May 2021, 13:52