தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் வறியோர் சந்திப்பு  திருத்தந்தை பிரான்சிஸ் வறியோர் சந்திப்பு   (Vatican Media)

திருத்தந்தை, நூறு வறியோர் சந்திப்பு

மகிழ்ச்சியோடு நற்செய்தியை அறிவிப்பதற்கும், உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சியை கொணர்வதற்கும் ஏற்ற காலம் இது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை சிறப்பித்திருக்கும் இக்காலத்தில், திருஅவை ஆற்றவேண்டிய செயல்கள் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 25, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

“ஆறுதலளிப்பதற்கு ஏற்ற காலம் இதுவே என்று, தூய ஆவியாராம் பரிந்துரையாளர், திருஅவையிடம், சொல்லிக்கொண்டிருக்கிறார். மேலும், உலகப்போக்குகளின் எதிர்விளைவுகள் பற்றி வருந்திக்கொண்டிருக்கும் காலம் அல்ல இது, ஆனால், உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சியைக் கொணரவேண்டிய காலம் இது” என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “உலகப்போக்கில் வீழ்ந்துவிடாமல், உலகின் மீது அன்பைப் பொழியவேண்டிய காலம் இது. இதைவிட இன்னும் மேலாக, சட்டங்கள், மற்றும், விதிமுறைகளை வலியுறுத்துவதைவிட, இரக்கத்திற்குச் சான்றாய் விளங்கும் காலம் இது. பரிந்துரையாளரின் காலம் இது” என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.

"பிரான்சிஸ்" ஆவணப்படம்

மேலும், மே 24, இத்திங்கள் மாலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில், "பிரான்சிஸ்" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டபின், அந்த அரங்கத்தின் முற்றத்தில், அந்த படத்தைப் பார்த்த, வீடற்றோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் என, ஏறத்தாழ நூறு பேரை, சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை வறியோரைச் சந்தித்தது பற்றிக் கூறிய திருப்பீடத் தகவல் தொடர்பக இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், இந்த படத்தைப் பார்த்த அந்த மக்களுக்கு, அதற்குப்பின் உணவுப்பொட்டலங்களும் வழங்கப்பட்டன என்றும் கூறினார்.

இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் Evgeny Afineevsky அவர்களும், Laudato si' அமைப்பும் இணைந்து, இந்த படத்தை திரையிட்டனர்.

25 May 2021, 15:23