தேடுதல்

Vatican News
Laudato Sí  வாரம் Laudato Sí வாரம் 

Laudato Sí வாரம் விடுக்கின்ற அழைப்பு

Laudato Sí வாரம், இந்த பூமிக்கோளம், மற்றும், வறியோரின் அழுகுரலை, மக்கள் மேலும் அதிகமாகக் கேட்பதற்கு நல்லதொரு வாய்ப்பு – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 16, இஞ்ஞாயிறு முதல் சிறப்பிக்கப்பட்டுவரும், Laudato Sí  வாரம், அதாவது இறைவா உமக்கே புகழ் வாரத்தையொட்டி, மே 18, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் இணையப் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பராமரிக்கவேண்டியதன் நம் கடமையை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

“நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைச் சரியான முறையில் பராமரிப்பதை உறுதிசெய்யும்பொருட்டு, நம் உலகத்தில் நல்லது எது நடைபெற்றாலும், அது, இக்கால, மற்றும், வருங்காலத் தலைமுறைகளுக்காக ஆற்றப்படுவது என்ற ஆழமான உறுதிப்பாட்டில், என்றென்றும் பரந்துபட்ட மற்றும், மிக அதிகமான கூட்டுப்பொறுப்புணர்வைக் கொண்டிருப்பவர்களாக, நாம் எல்லாரும் மாறவேண்டும்” என்ற சொற்கள், இறைவா உமக்கே புகழ் வாரம் (#LaudatoSiWeek) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மே 16 இஞ்ஞாயிறன்று தொடங்கப்பட்டுள்ள Laudato Sí  வாரம், மே 23, வருகிற ஞாயிறன்று நிறைவடைகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு Laudato si’ வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு மே 24ம் தேதி கையெழுத்திட்டுள்ள இந்த திருமடல், 2015ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி வெளியிடப்பட்டது.

நம் பொதுவான இல்லமாகிய இந்த பூமிக்கோளத்தைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய வானக அரசியே வாழ்த்தொலி உரைக்குப்பின் அழைப்பு விடுத்தார். Laudato Sí வாரம், இந்த பூமிக்கோளம், மற்றும், வறியோரின் அழுகுரலை, மக்கள் மேலும் அதிகமாகக் கேட்பதற்கு நல்லதொரு வாய்ப்பு என்றும் திருத்தந்தை கூறினார்.

18 May 2021, 15:24