தேடுதல்

Vatican News
  “பிறப்பின் பொதுவான நிலைமைகள்”  கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் “பிறப்பின் பொதுவான நிலைமைகள்” கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

குழந்தை பிறப்பு, குடும்பம் குறித்த டுவிட்டர் செய்திகள்

நிகழ்காலத்தில் குடும்பம் மையமாக அமைக்கப்படாவிட்டால், வருங்காலமே கிடையாது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 14, இவ்வெள்ளியன்று, குழந்தை பிறப்பு மற்றும், குடும்பம் ஆகியவற்றை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சமுதாயத்தில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்காலத்தில் குடும்பம் மையமாக அமைக்கப்படாவிட்டால், வருங்காலமே கிடையாது. மாறாக, குடும்பம் மீண்டும் உருவானால், அனைத்தும் மீண்டும் அமையும் என்ற சொற்களை, பிறப்பு விகிதம் (#Birthrate) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை தன் முதல் செய்தியில் பதிவுசெய்திருந்தார்.

இத்தாலிய மொழியில் மட்டும் திருத்தந்தை வெளியிட்டிருந்த மற்றொரு டுவிட்டர் செய்தியில், வாழ்வை வரவேற்காத ஒரு சமுதாயம், வாழ்வதையே நிறுத்திவிடும். மக்கள் சமுதாயத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்குவதற்கு, குழந்தைகளே நம்பிக்கை என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 14, இவ்வெள்ளியன்று, பிறப்பின் பொதுவான நிலைமைகள் என்ற தலைப்பில், இத்தாலிய மொழியில் ஆற்றிய உரையை இணையதளத்தில் வாசிப்பதற்கு உதவியாக, அதன் முகவரியும் டுவிட்டர் செய்தியோடு இணைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.  https://www.vatican.va/content/francesco/it/speeches/2021/may/documents/papa-francesco_20210514_statigenerali-natalita.html

அருங்கொடை இயக்கம்

இன்னும், உலகளாவிய அருங்கொடை இயக்கத்திற்கு, இடைக்கால வழிநடத்துனராக, Pino Scafuro அவர்களை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை நியமித்துள்ளது.

CHARIS எனப்படும், உலகளாவிய அருங்கொடை இயக்கத்திற்கு, பொது பேரவை நடைபெறும்வரை, Pino Scafuro அவர்கள், அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டவரான Pino Scafuro அவர்கள், 1965ம் ஆண்டில் புவனோஸ் அய்ரஸ் நகரில் பிறந்தவர். இரு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், மேய்ப்புப்பணி உளவியல் துறையில் சிறப்புக்கல்வியை முடித்துள்ளதோடு, உளவியலில் பட்டம் பெற்றவர். இவர், 1985ம் ஆண்டிலிருந்து அருங்கொடை இயக்கத்தில் இணைந்து ஆர்வமாகப் பணியாற்றி வருகிறார்.

14 May 2021, 15:46