தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

"Antiquum ministerium" மடலை மையப்படுத்தி டுவிட்டர் செய்திகள்

இறைவேண்டல், கனிவு, நம்பிக்கை, பிறர் பணி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறைக்கல்வி ஆசிரியரின் திருப்பணி பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள, Motu proprio வடிவிலான "Antiquum ministerium" திருத்தூது மடலை மையப்படுத்தி,  அவர், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், மே 11, இச்செவ்வாயன்று செய்திகளை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் அழகு, நன்மைத்தனம், மற்றும், உண்மை ஆகியவற்றைக் கண்டுணரக் காத்துக்கொண்டிருக்கும் அனைவரையும் சந்திப்பதற்குப் புறப்படுமாறு, இன்றும்கூட, ஆண்கள், மற்றும், பெண்களை, தூய ஆவியார் அழைக்கிறார் என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் திருத்தூது மடல் பற்றி, #Cathechists, #AntiquumMinisterium ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் பதிவான  டுவிட்டர் செய்திகளுடன், அந்த மடலை வாசிப்பதற்கு உதவியாக, இணைய பக்க முகவரியும் தரப்பட்டுள்ளன.

https://www.vatican.va/content/francesco/en/motu_proprio/documents/papa-francesco-motu-proprio-20210510_antiquum-ministerium.html

மேலும், “நான் பின்செல்லவேண்டிய பாதை எது? உலகப்போக்கின் பாதைகள், தன்னிலையை வலியுறுத்தும் பாதைகள், தன்னல அதிகாரத்தின் பாதைகள் போன்ற, விண்ணகத்திற்கு இட்டுச்செல்லாத பாதைகளும் உள்ளன. ஆனால், தாழ்ச்சிநிறைந்த அன்பு, இறைவேண்டல், கனிவு, நம்பிக்கை, பிறர் பணி போன்ற இயேசுவின் பாதைகளும் உள்ளன” என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், உலகை பயங்கரமான நெருக்கடியில் வைத்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று ஒழியுமாறு, திருத்தந்தையின் அழைப்பின்பேரில், இந்த மே மாதத்தில் உலகின் 30 திருத்தலங்களில், மாரத்தான் செபமாலை பக்தி முயற்சி நடைபெற்று வருகிறது.

மே 11, இச்செவ்வாயன்று, பெல்ஜியம் நாட்டின் வறியோரின் கன்னி மரியா (Banneux) திருத்தலத்தில், வீடற்றோர் மற்றும், பொருளாதாரத்தில் இன்னல்களை எதிர்கொள்ளும் அனைவருக்காகவும் செபமாலை செபிக்கப்படுகின்றது.  

11 May 2021, 15:00