தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை - குடும்பங்களுக்காக இறைவேண்டல் செய்வோம்

உலக குடும்பங்கள் நாள், 1995ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் மே 15ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 15, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, உலக குடும்பங்கள் நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் இணையப் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயரங்கள் நிறைந்த இக்காலக்கட்டத்தில், குடும்பங்கள் ஒன்றிப்பில் நிலைத்திருக்குமாறு இறைவனை மன்றாடுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் வேறுபாடுகளின் முரண்பாடற்ற ஒன்றிப்பாக அமைந்திருக்கும் குடும்பம், வாழ்வுக்கும், மற்றவருக்கும், தன்னையே திறக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. எனவே, குடும்பங்கள், இந்த இன்னல்நிறைந்த காலத்தில் ஒன்றிப்பில் நிலைத்திருக்கவும், தேவையில் இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டவும் வேண்டுமென்று, நாம் அனைவரும், இறைவேண்டல் செய்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன

இவற்றை, ஒன்றிணைந்து செபிப்போம், (#PrayTogether) குடும்பங்கள் நாள் (#DayofFamilies) ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், 1993ம் ஆண்டு, ஐ.நா. பொது அவை, உலக குடும்பங்கள் நாளை உருவாக்கியது. பின்னர், 1994ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் மே 15ம் தேதி, ஒவ்வொரு தலைப்பில், இந்த உலக குடும்பங்கள் நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மே 15, இச்சனிக்கிழமையன்று, “குடும்பங்கள், மற்றும், புதிய தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில், இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டது.

மாரத்தான் செபமாலை

மேலும், உலகெங்கும் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பின்பேரில், மே 15, இச்சனிக்கிழமையன்று போஸ்னியா குடியரசின் மெஜ்ஜூகோரே அமைதியின் அன்னை மரியா திருத்தலத்தில், புலம்பெயர்ந்தோருக்காக, மாரத்தான் செபமாலை பக்திமுயற்சி நடைபெற்றது.

மே 16, இஞ்ஞாயிறன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் அமல அன்னை மரியா திருத்தலத்தில், வன்முறை, மற்றும், மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களுக்காகச் செபமாலை செபிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2021, 15:31