தேடுதல்

 VAX Live நிகழ்ச்சிக்கு திருத்தந்தை செய்தி VAX Live நிகழ்ச்சிக்கு திருத்தந்தை செய்தி 

திருத்தந்தை - ஒளியும், நம்பிக்கையும் நமக்குத் தேவை

இவ்வுலகில் பயணம் மேற்கொள்ளும் எல்லாருக்கும், ஒரு புதிய உடன்பிறந்த உணர்வு, ஓர் உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு கொடைகளை இறைவன் வழங்குவாராக - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குணப்படுத்தல் மற்றும், மீட்பு ஆகியவற்றுக்கு ஒளியும், நம்பிக்கையும் நமக்குத் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 8, இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற, இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு அனுப்பிய ஒளிவலைக்காட்சி செய்தியில் கூறியுள்ளார்.

“VAX Live: உலகை ஒன்றிணைப்பதற்கு இசை நிகழ்ச்சி” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டோரிடம், ஒளிவலைக்காட்சி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்புக்கள் மட்டுமன்றி, தனியுரிமை கோட்பாடு, மற்றும், தனது நாடு மட்டும் என்ற தேசியவாதம் ஆகிய தொற்றுக்கிருமிகளின் பாதிப்புக்களிலிருந்தும், மனிதர் குணம்பெறவேண்டிய தேவை உள்ளது என்று கூறியுள்ளார்.

உங்களைப் போல, நடனமாடவோ அல்லது, பாடவோ முடியாத இந்த வயதான மனிதரிடமிருந்து வருகின்ற இனிய நல்வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என, தன் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வயதானவர், என்றாலும், அநீதியும் தீமையும் வெற்றிகொள்ளப்பட முடியாதவை அல்ல என்று இளையோர் நம்புவதுபோல் நம்புகிறவர் என்று குறிப்பிட்டுள்ளார். 

குணப்படுத்தல் அவசியம்

இந்த உலகில் தொடர்ந்து பரவிவரும் பெருந்தொற்று உருவாக்கியுள்ள இருளான, மற்றும், நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், நமக்கு ஒளியும், நம்பிக்கையும் தேவைப்படுவதோடு,  குணப்படுத்தல், மற்றும், மீட்புப்பாதைகளும் அவசியமாகின்றன என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தீமையின் அடையாளங்களை மட்டுமல்ல, அதன் காரணிகளையும், அடிவேரிலிருந்து குணப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, மரணத்தையும், துன்பங்களையும், ஏன் அனைவரின் வாழ்க்கையையுமே பாதித்துள்ள இந்த பெருந்தொற்று காலத்தில், சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் மறக்கப்படக் கூடாது என்று அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்த பெருந்தொற்று, இப்பூமிக்கோளத்தில், ஏற்கனவே நிலவும் சமுதாய மற்றும், சுற்றுச்சூழல் நெருக்கடிகளை மேலும் மோசமடையச் செய்துள்ளது என்றும், தான் என்ற தனிமனிதக் கோட்பாடு, மற்றவரின் துன்பங்கள் மீது அக்கறையற்ற நிலையைக் கொணர்கிறது என்றும், திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

நாம் குணப்படுத்தவேண்டிய சில கலாச்சார தொற்றுக்கிருமிகள்பற்றி குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள மனமில்லாத தேசியவாதம், பொருளாதாரச் சந்தை சட்டங்கள், அல்லது, அறிவுச்சொத்து கொள்கைகளை, மற்றவரின் நலன்மீது அன்பின்றி வைத்திருப்பது, மனித சமுதாயத்தின் வளங்களை சில செல்வந்தர்களே வைத்திருக்கும் நோயுற்ற பொருளாதாரம் போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும், பெருந்தொற்று முடிவுற்றபின் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் பயணம் மேற்கொள்ளும் எல்லாருக்கும், ஒரு புதிய உடன்பிறந்த உணர்வு, ஓர் உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு போன்ற கொடைகளை இறைவன் வழங்க தான் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இச்சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் கோவிட்-19 தடுப்பூசிகள், உலக அளவில் சமமாக விநியோகிக்கப்படவேண்டும் என்ற கருத்து அதிகமாக வலியுறுத்தப்பட்டது. இன்னும், இந்த தடுப்பூசிகள் அனைத்துக் குடும்பங்களுக்கும், சமுதாயங்களுக்கும் வழங்கப்படும் என்ற நம்பிக்கையும் அதில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2021, 15:08