இயேசுவின் விண்ணேற்பு தரும் மகிழ்வுக்கு காரணங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இயேசு தங்களைவிட்டுப் பிரிந்து விண்ணகத்திற்கு எழும்பிச்சென்றது, சீடர்களில் கவலையை ஏற்படுத்தவில்லை, மாறாக, உலகிற்குள் மறைப்பணியாற்றச் செல்வதற்குரிய தயாரிப்பையும், மகிழ்வையும் தந்தது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் விண்ணேற்றம், அவரின் சீடர்களில், இழப்பு குறித்த உணர்வையோ, தாங்கள் கைவிடப்பட்ட உணர்வையோ வழங்கவில்லை, ஏனெனில், இயேசுவின் விண்ணேற்றம், அவர் இவ்வுலகிற்கு வந்த பணியின் முழுநிறைவாக இருந்தது என்று, மே 16, ஞாயிறு நண்பகல், 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று உலகின் பல பாகங்களில் கொண்டாடப்பட்ட இயேசுவின் விண்ணேற்ற விழா, மனித நிலைக்கு இறங்கி வந்த இறைமகன், நம் ஊனுடலை எடுத்துக்கொண்டு விண்ணகம் எழும்பிச் சென்றதைக் குறிக்கின்றது, என்றார்.
நம் ஊனுடல் விண்ணகத்தில் உள்ளது என்ற எண்ணமே நமக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு விண்ணேற்றம் அடைந்தது, அவரின் சீடர்களை கைவிட்டுச் சென்றது அல்ல, மாறாக, தன் சீடர்களின், மற்றும், நம் இறைவேண்டலின் வழியாக நம்முடனேயே இருக்கிறார் என்ற திருத்தந்தை, நம்மை மீட்ட காயங்களை தன் தந்தையிடம் இயேசு காண்பித்துக் கொண்டிருப்பது, நமக்கு பாதுகாப்பையும், மகிழ்வையும் தருவதாக உள்ளது என்றார்.
இயேசுவின் விண்ணேற்றம் குறித்து நாம் மகிழ்வதற்குரிய இரண்டாம் காரணம், தூய ஆவியாரை நமக்கு அனுப்புவதென அவர் வாக்களித்ததாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வெளியில் சென்று நற்செய்தியை அறிவிப்பதற்கு உதவும் வகையில் நமக்கு தூய ஆவியாரை அனுப்புவதாக இயேசு வாக்களித்ததே நம் மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணம் என்றார்.
வாழ்வின் அனைத்து சூழல்களிலும் உயிர்த்த கிறிஸ்துவுக்கு நாம் இவ்வுலகில் துணிவுள்ள சான்றாக செயல்பட, விண்ணக அரசியாம் அன்னை மரியா நமக்கு உதவுவாராக, என்று கூறி தன், 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.