தேடுதல்

Vatican News
முதுபெரும்தந்தை Ghabroyan அடக்கத் திருப்பலி முதுபெரும்தந்தை Ghabroyan அடக்கத் திருப்பலி 

முதுபெரும்தந்தை Ghabroyan, துன்புறுவோருக்கு நற்பணியாற்றியவர்

86 வயது நிரம்பிய முதுபெரும்தந்தை Ghabroyan அவர்கள், 5 மாதங்களுக்கு மேலாக நோயால் துன்புற்று, மே 25, இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அர்மேனிய கத்தோலிக்கரின் தலைவராகப் பணியாற்றிய, முதுபெரும்தந்தை Gregory Peter XX Ghabroyan அவர்கள், தன் மேய்ப்புப்பணிகளில், பல்வேறு அரசு மற்றும், அரசு-சாரா அமைப்புக்களுடன் இணைந்து, துன்புறும் மக்களுக்கு, குறிப்பாக, சிரியா, மற்றும், லெபனான் நாடுகளின் மக்களுக்கு அரும்பணிகள் ஆற்றினார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 25, இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்த, முதுபெரும்தந்தை Ghabroyan அவர்களுக்கு, மே 29 இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற, இறுதி வழியனுப்பும் நிகழ்வுக்கென, அர்மேனிய கத்தோலிக்கரின் சிலிசியாத் திருஅவையின் இப்போதைய பரிபாலகர் பேராயர்  Boutros Marayati அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடக்கச் சடங்கு நிகழ்வில், தனது பிரதிநிதியாகப் பங்கேற்ற, சிரியாவின் திருப்பீட தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

அர்மேனியர்களின் சிலிசியாத் திருஅவையின் தலைவராக, முதுபெரும்தந்தை Ghabroyan அவர்கள் ஆற்றிய நற்ணிகளைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறை ஊழியர் கர்தினால் Gregory Peter XV Agagianian அவர்களை, அருளாளர், மற்றும், புனிதர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக கூறியுள்ளார்.

முதுபெரும்தந்தை Ghabroyan அவர்களோடு, பல்வேறு தருணங்களில் இடம்பெற்ற சந்திப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, 2015ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, உரோம் நகரில், இந்த முதுபெரும்தந்தையோடு கூட்டுத் திருப்பலி நிகழ்த்தியது, 2016ம் ஆண்டில், அர்மேனியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது அவரைச் சந்தித்தது, 2018ம் ஆண்டில், வத்திக்கான் தோட்டத்தில், நரேக் நகர் புனித கிரகரியின் திருவுருவத்தை அமைத்தபோது அவரது உடனிருப்பு போன்ற பல சந்திப்புக்களை குறிப்பிட்டுள்ளார். 

86 வயது நிரம்பிய முதுபெரும்தந்தை Ghabroyan அவர்கள், 5 மாதங்களுக்கு மேலாக நோயால் துன்புற்று, மே 25, இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்தார். இவர், 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில், அர்மேனிய கத்தோலிக்கரின் சிலிசியாத் திருஅவையின் இருபதாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயத்தில், திருத்தந்தையும், அவருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

29 May 2021, 14:53